ஊழல் கட்டமைப்பாகிவிட்ட "எஃகு' கட்டமைப்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வேதனை

எஃகு கட்டமைப்பு என்று பெருமிதத்துடன் கூறப்பட்ட இந்திய குடிமைப்பணி இப்போது ஊழல் கட்டமைப்பாக மாறிவிட்டிருக்கிறது என்பது மிகுந்தவேதனை அளிக்கிறது என்றும்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

எஃகு கட்டமைப்பு என்று பெருமிதத்துடன் கூறப்பட்ட இந்திய குடிமைப்பணி இப்போது ஊழல் கட்டமைப்பாக மாறிவிட்டிருக்கிறது என்பது மிகுந்தவேதனை அளிக்கிறது என்றும், இந்த நிலை மாற்றப்பட வேண்டுமென்றும் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தெரிவித்தார்.
 கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் சொந்தம் கல்விச் சோலை அரசுப் பணி போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் 8-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டு ஆற்றிய சிறப்புரை:
 பணி நிரந்தரம், ஊதியம், சலுகைகள் உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பணியில் சேருவதில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியா முழுவதும் அரசுப் பணியின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
 தனியார் துறைகளில் அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பிருந்தும்கூட, பலரும் அரசுப் பணியை நாடுகிறார்கள் என்பதற்கு பணி நிரந்தரம்தான் மிக முக்கியமான காரணம். அதே நேரத்தில், தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை வீணாக்காமல் அரசுப் பணியை சமூகக் கடமையாக நினைத்து தேச மேம்பாட்டிலும், சமூக மேம்பாட்டிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஊதியத்துக்காகவும், பணி நிரந்தரத்துக்காகவும் மட்டுமே அல்லாமல் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும், அரசுப் பணியை அவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்தியா விடுதலை பெற்றபோது, இந்திய குடிமைப் பணி எஃகு கட்டமைப்பாக இருந்த நிலை மாறி, இப்போது ஊழல் கட்டமைப்பாக மாறியிருக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதை மீட்டெடுத்து மீண்டும் எஃகுக் கட்டமைப்பாக மாற்ற வேண்டிய பொறுப்பு வருங்கால அரசுப் பணியாளர்களுக்கு உண்டு.
 ஏழை, எளியோருக்கு அரசுப் பணி கிடைக்க வழிகோலும் சொந்தம் கல்விச் சோலையை கல்வி நிறுவனம் என்று கருத முடியாது. இது பயிற்சி நிலையம் அல்ல. ஓர் இயக்கம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு பயிற்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் இணைந்து ஆண்டு விழாவை நடத்துகிறார்கள் என்பதிலிருந்தே அதைத் தெரிந்துகொள்ளலாம்.
 இதற்கு உதாரணம் சொந்தம் கல்விச் சோலையின் அடிப்படைக் கொள்கை கடையேனுக்கும் கடைத்தேற்றம் என்பதுதான். தமிழகத்தின் மிகவும் பிற்பட்ட ஒரு பகுதியில் எந்தவித வசதியும் இல்லாத அடித்தட்டு மக்களை இந்திய அரசுப் பணிக்கு தயார் செய்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வைப்பது என்பது, சொந்தம் கல்விச் சோலையின் கல்விச் சேவை என்றுதான் கூற வேண்டும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோல தொண்டுள்ளத்துடன் கூடிய பயிற்சி நிலையங்கள் உருவானால் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவது என்கிற கனவு மெய்ப்படும் என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
 கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1150 மதிப்பெண் பெற்று முதல் முறை நீட் தேர்வில் 148 மதிப்பெண்களும், இரண்டாம் முறை 700க்கு 542 மதிப்பெண்ணும் பெற்று தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா, சொந்தம் கல்வி சோலையில் பயிற்சி பெற்று அரசு பணியில் கடந்த ஆண்டு சேர்ந்த 29 பேர்கள் இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.
 சொந்தம் கல்விச் சோலை இயக்குநர் முகுந்தன் வரவேற்புரையில், சொந்தம் கல்விச் சோலை மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதில் பயிற்சி ஆசிரியர்களோடு, தினமணி நாளிதழும் இம்மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது என்றார்.
 சொந்தம் கல்விச் சோலை நிறுவனர் சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், கொளஞ்சியப்பா போட்டித் தேர்வு பயிற்சி மைய நிறுவனர் கொளஞ்சியப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் காசி விஸ்வநாதன், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் காலத்திலேயே தயாராவது குறித்து சிறப்புரையாற்றினார்.
 பின்னர் கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தினமணி மாணவர் மலர் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ரகு நன்றிகூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com