குப்பையை தரம் பிரித்து வழங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி திட்டம்

சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகையில் தற்போது 38 சதவீத மக்கள் மட்டுமே குப்பையைத் தரம் பிரித்து வழங்குவதால் அதை 75 சதவீதமாக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகையில் தற்போது 38 சதவீத மக்கள் மட்டுமே குப்பையைத் தரம் பிரித்து வழங்குவதால் அதை 75 சதவீதமாக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
 சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.
 மாநகராட்சி, என்யூஎல்எம் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மூலம் தினமும் காலை வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.
 இதைத்தவிர்த்து பள்ளிக்கரணை, சாத்தான்காடு உள்ளிட்ட குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மக்கும் குப்பைகளை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் அவற்றை மறுசுழற்சி செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதன்படி தினமும் சேகரிக்கப்படும் 374 டன் மக்கும் குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன.
 அந்தவகையில் 148 உரம் தயாரிக்கும் கிடங்குகள், 2 மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்குகள், 33 மீத்தேன் எரிவாயு தயாரிக்கும் கலன்கள், 7 மின்சாரம் தயாரிக்கும் கலன்கள், 44 உரக்கிணறுகள், 174 சின்டக்ஸ் தொட்டிகள் மூலம் மக்கும் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
 மேலும், சென்னை மாநகராட்சி பூங்காவில் 537 மூங்கில் தொட்டிகள், 21 மண் குழிகள் மூலம் தோட்டக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மக்காத கழிவுகள், 64 தரம் பிரிக்கும் மையங்கள் மூலம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
 இதற்கிடையே மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களின் துப்புரவுப் பணிகளை தனியாரிடம் கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
 இதுதொடர்பான டெண்டர் விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்தநிலையில் குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
 இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் உள்ள 14 லட்சத்து 94 ஆயிரத்து 254 வீடுகளுக்கு தினமும் சென்று திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 953 வீடுகளில் மட்டுமே குப்பையைத் தரம் பிரித்து அளிக்கின்றனர்.அதாவது 38 சதவீதத்தினர் மட்டுமே குப்பை தரம் பிரித்து அளிக்கின்றனர்.
 இந்த எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே பொதுமக்கள், குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இதை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குப்பையைத் தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துரு தயாரித்து அனுப்பிவைக்கப்படும். அரசு அனுமதி அளித்தவுடன் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com