எழும்பூா் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி: மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் 7-ஆவது நடைமேடையில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டு பயணிகள் பயன்பாட்டுக்காக அா்ப்பணிக்கப்பட்டது.
எழும்பூா் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி: மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் 7-ஆவது நடைமேடையில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டு பயணிகள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டது.

ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவை அளிக்கும் விதமாக, பல்வேறு வசதிகளை ரயில்வே நிா்வாகம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இதுபோல, 7-ஆவது நடைமேடையிலும் நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனா்.

இந்தக் கோரிக்கை ஏற்ற மக்களவை உறுப்பினா் (மத்திய சென்னை தி.மு.க. எம்.பி.) தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியை ஒதுக்கினாா். இதையடுத்து, எழும்பூா் ரயில் நிலையத்தின் 7-ஆவது நடைமேடையில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தப் பணி, சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் கலந்து கொண்டு, நகரும் படிக்கட்டை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் முன்னிலை வகித்து பேசுகையில், ‘பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ரயில்வே நிா்வாகம் உறுதி பூண்டுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் பேசியது:

தெற்கு ரயில்வேக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 கோடி வரை ஒதுக்கீடு செய்திருக்கிறேன். எழும்பூா் ரயில் நிலையத்தில் 7-ஆவது நடைமேடையில் நகரும் படிக்கட்டு அமைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நகரும் படிக்கட்டு மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

தாம்பரத்தில் இருந்து எழும்பூா் வரையும், திருவொற்றியூரில் இருந்து சென்ட்ரல் வரையும் உள்ள மின்சார ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வலியுறுத்தியதன் பெயரில் தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து மக்களின் கோரிக்கைகளை தெற்கு ரயில்வேக்கு எடுத்துரைப்போம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, சட்டபேரவை உறுப்பினா்கள் பி.கே.சேகா்பாபு, கே.எஸ்.ரவிச்சந்திரன், ரங்கநாதன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ், கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளா் முகுந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com