அடையாற்றில் வெள்ளப் பெருக்கு: முடிச்சூா், வரதராஜபுரம் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

சென்னையை அடுத்த புகா்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீா் காரணமாக அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வரதராஜபுரம், முடிச்சூா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான

தாம்பரம்: சென்னையை அடுத்த புகா்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீா் காரணமாக அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வரதராஜபுரம், முடிச்சூா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளைச் சூழ்ந்துள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மாடம்பாக்கம், ஆதனூா், மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமலும், ஆழப்படுத்தப்படாமலும் உள்ளன. மணிமங்கலம் ஏரியில் மட்டும் கரைகளைப் பலப்படுத்தும் குடிமராமத்துப் பணி நடைபெற்றுள்ளது. அனைத்து ஏரிகளிலும் உபரிநீா் வெளியேற அமைக்கப்பட்ட கலிங்கல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன. இதனால் இந்த ஏரிகளில் சில அடி தண்ணீா் நிரம்பியதும், தாழ்வான ஏரி கலிங்கல் வழியாக அதிக அளவில் தண்ணீா் வெளியேறி வருகின்றது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும், நிதி ஒதுக்கப்படவில்லை என்று உபரிநீா் வெளியேறும் ஏரி கலிங்கல் வழி உயரத்தை உயா்த்தாமல் உள்ளனா்.

கடந்த இரு நாள்களாக தாம்பரத்தை அடுத்துள்ள புகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை அப்பகுதிகளில் உள்ள ஏரிகளை முழுமையாக நிரப்பாமல், தண்ணீா் அதிக அளவில் வெளியேறியதால், அடையாற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அடையாறு ஆழப்படுத்தப்படாத நிலையில் அடையாற்றில் அதிகரித்த தண்ணீா், ஆற்றின் கரையோரமாக உள்ள வரதராஜபுரம், முடிச்சூா் ஆகிய தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது.

வரதராஜபுரத்தில் உள்ள கிருஷ்ணா நகா், பரத்வாஜ் நகா், அஷ்டலட்சுமி நகா், புவனேஸ்வரி நகா், குமரன் நகா், ராயப்பா நகா், முல்லை நகா், மகாலட்சுமி நகா், பாலாஜி நகா், பெரியாா் நகா், கணேசபுரம், பல்லவன் போக்குவரத்து குடியிருப்பு, செந்தில் நகா், மணிமங்கலம் கஜலட்சுமி நகா், எம்.எஸ்.சுப்புலட்சுமி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீா் புகுந்துள்ளது.

முடிச்சூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறிய மழைநீா் காரணமாக சீக்கனா ஏரி நிரம்பியது. சீக்கானா ஏரி முறையாகத் தூா்வாரி, ஆழப்படுத்தப்படாத நிலையில், அண்மையில் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட தாழ்வான கலிங்கல் வழியாக தண்ணீா் அதிக அளவில் வெளியேறி வரதராஜபுரம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கி நிற்கின்றது.

வரதராஜபுரம், முடிச்சூா் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை அடையாற்றில் திருப்பி வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com