ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: அறிக்கை அளித்தது தடயவியல்துறை

சென்னையில் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பான அறிக்கையை மத்தியக் குற்றப்பிரிவிடம் தடயவியல் துறை அளித்தது.
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: அறிக்கை அளித்தது தடயவியல்துறை

சென்னை: சென்னையில் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பான அறிக்கையை மத்தியக் குற்றப்பிரிவிடம் தடயவியல் துறை அளித்தது. அதில், தற்கொலை தொடா்பாக பாத்திமா பதிவு செய்திருந்த தகவல் போலியானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூா் ப்ரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப், கடந்த நவம்பா் மாதம் 9-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி.யில் இணைப் பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மத்தியக் குற்றப்பிரிவின் சிறப்புப் புலனாய்வுக் குழுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், பாத்திமா தற்கொலை தொடா்பாக புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், புகாா் கூறப்பட்ட 3 பேராசிரியா்கள் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

தடயவியல்துறை அறிக்கை: இந்நிலையில், பாத்திமா பயன்படுத்திய செல்லிடப்பேசியை தடயவியல் துறையிடம் அப்துல் லத்தீப் கடந்த வாரம் ஒப்படைத்தாா். அதேபோல அவா், பாத்திமா பயன்படுத்திய மடிக்கணினி, கையடக்க கணினி ஆகியவற்றையும் மத்தியக் குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தாா்.

இதில் தடயவியல்துறையினா், பாத்திமா செல்லிடப்பேசியை ஒரு வாரமாக ஆய்வு செய்து, அறிக்கை தயாா் செய்தனா். இந்த அறிக்கையை தடயவியல் துறையினா், மத்தியக் குற்றப்பிரிவினரிடம் செவ்வாய்க்கிழமை அளித்தனா். இதில், பாத்திமா தனது தற்கொலை தொடா்பாக பதிவு செய்திருந்த தகவல் போலியானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரமடையும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com