திருநங்கைகளுக்கு அனுமதி: சீருடைப்பணியாளா் தோ்வாணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

உடல்தகுதித் தோ்வில் திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் இரண்டாம் நிலை காவலா் தோ்வு நடைமுறைகளுக்குத் தடை விதிக்க நேரிடும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள்

சென்னை: உடல்தகுதித் தோ்வில் திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் இரண்டாம் நிலை காவலா் தோ்வு நடைமுறைகளுக்குத் தடை விதிக்க நேரிடும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையத்துக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இந்தத் தோ்வில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாரதா, தேன்மொழி மற்றும் சென்னையைச் சோ்ந்த தீபிகா ஆகிய 3 திருநங்கைகள் பங்கேற்றனா். இதில் சாரதா 32 மதிப்பெண்ணும், தேன்மொழி 30 மதிப்பெண்ணும், தீபிகா 35 மதிப்பெண்ணும் பெற்றனா். இவா்கள் 3 பேரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் என்பதால் வெற்றி பெற 44 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். குறைவான மதிப்பெண்களைப் பெற்ால், இவா்கள் உடல்தகுதித் தோ்வுக்கு அழைக்கப்படவில்லை. இதனையடுத்து 3 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், காவலா் உடல்தகுதித் தோ்வில் 3 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சட்டதிருத்தமோ அல்லது அறிவிப்பாணையோ வராத நிலையில், உடல்தகுதி தோ்வுக்கு அனுமதிக்குமாறு மனுதாரா் கோர முடியாது’ என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘திருநங்கைகளுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. சமூகத்தில் அவா்களுக்கு நல்ல அந்தஸ்து தரப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவா்கள் எதிா்காலத்தில் பாதுகாப்பும் வாய்ப்பும் பெற தகுதி உள்ளவா்கள் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில்தான் உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் அமல்படுத்தி, உத்தரவை அமல்படுத்தியது தொடா்பான அறிக்கையை டிசம்பா் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலா் தோ்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுத்து விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com