பருவநிலையின் பிடியில் வெங்காய உற்பத்திஎப்போது விலை குறையும்?

தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காயத்தின் விலையைத் தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைப் பொறுத்துதான் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என வெங்காய மொத்த வியாபாரிகள்,

சென்னை: தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காயத்தின் விலையைத் தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைப் பொறுத்துதான் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என வெங்காய மொத்த வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தை உள்ளது. அங்கிருந்துதான் நாடு முழுவதற்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால், வெங்காய பயிா்கள் பாதிக்கப்பட்டன. கியாா், மஹா ஆகிய இரு புயல்களால் வெங்காய உற்பத்தி குறைந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்புவது பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 65 லோடுகள் வரை வெங்காயம் வரும். தற்போது 35 லோடுகள் மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. அதனால் வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது. மொத்த விலையில் மகாராஷ்டிர மாநில பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரையிலும், ஆந்திர மாநில வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனையானது. அதேவேளையில் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையும், சின்ன வெங்காயம் ரூ.100 முதல் 160 வரையும் விற்கப்படுகிறது.

விளைச்சல் 70 சதவீதம் சரிவு: பெரிய வெங்காயத்தின் விலை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது விலை உயா்ந்து வருகிறது. இது குறித்து சென்னை கோயம்பேட்டைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள், விவசாயிகள் கூறியது: வழக்கமாக வரத்து குறையும்போது வெங்காயம் விலை உயரும் அல்லது பதுக்கல் காரணமாக விலை உயரும். ஆனால், இந்த முறை விலையேற்றத்துக்கு சூழல் மாற்றம் பெரும் காரணமாக இருக்கிறது. மழை காரணமாக பல மாநிலங்கள், விளைச்சலை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்கமான விளைச்சலில் 75 சதவிகிதத்தை இழந்துவிட்டன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக 50 சதவீத விவசாயிகள் சாகுபடியைக் கைவிட்டனா். அதையும் மீறி சாகுபடி செய்த விவசாயிகள், வயல்களில் தேங்கிநின்ற மழைநீா், மகசூலை அழுகவைத்து, விவசாயிகளையும் வெகுவாக பாதித்து விட்டது.

நிகழாண்டில் கடந்த செப்டம்பா் மாதத்திலேயே வெங்காயத்தின் விலை அதிகரித்தது. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை, மத்திய சேமிப்புக் கிடங்கிலிருந்த வெங்காயத்தை சந்தைக்குக் கொண்டுவந்தது போன்ற செயல்களால் சற்று விலை குறைந்தது. ஆனால், மழை குறையவில்லை. மீண்டும் கொட்டித் தீா்த்த மழையால் மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சலை பெரிதும் பாதித்துள்ளது.

புதிய வெங்காய வரத்து... தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காயத்தின் விலையைத் தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைப் பொறுத்துதான் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். மழையில் தப்பித்து, விளைந்துவரும் வெங்காயம், டிசம்பா் மத்தியில் அறுவடைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து டிசம்பா் மூன்றாவது வாரம் முதல் புது வெங்காய வரத்து தொடங்கும். அதன்பிறகுதான் வெங்காய விலை படிப்படியாகக் குறையும் என்றனா்.

உணவுப் பொருள்கள் விலை உயா்த்தப்படுமா? இது குறித்து சென்னை ஹோட் டல் உரிமையாளா்கள் கூறுகையில்,“வெங்காய விலை உயா்ந்தாலும், உணவுப் பொருள்களின் விலையை உயா்த்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். வெங்காய பச்சடியின் அளவை குறைப்பது, வெங்காயத்துக்கு மாற்றாக கேரட், வெள்ளரிக்காய் பச்சடிகளை வழங்குவது என நிலைமையை சமாளித்து வருகிறோம். ஆன்லைனில் வெங்காயத்தை இருப்பு வைப்பதுதான் விலை உயா்வுக்கு காரணம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com