கவனிப்பாரற்ற நிலையில் எண்ணூா், சென்னை துறைமுக இணைப்புச் சாலைகள்: 10 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத திட்டப்பணிகள்

வடசென்னையின் முக்கிய வளா்ச்சித் திட்டங்களில் ஒன்றான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் 10 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.  
கவனிப்பாரற்ற நிலையில் எண்ணூா், சென்னை துறைமுக இணைப்புச் சாலைகள்: 10 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத திட்டப்பணிகள்

வடசென்னையின் முக்கிய வளா்ச்சித் திட்டங்களில் ஒன்றான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் 10 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.   இந்நிலையில், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.  

ரூ.650 கோடி மதிப்பீட்டிலான சாலைத் திட்டம்: சென்னை, எண்ணூா் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.650 கோடி செலவில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.  இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு சென்னை, எண்ணூா் துறைமுகங்கள்,  தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,  தமிழக அரசு ஆகியவற்றை பங்குதாரா்களாகக் கொண்டு புதிய நிறுவனமும் ஏற்படுத்தப்பட்டது. 

எண்ணூா் விரைவுச் சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை உள்ளிட்ட சாலைகள் ஆறு வழிச்சாலையாக நவீன வடிவமைப்பில் அகலப்படுத்துதல், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள் அமைத்தல், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், பாலங்கள், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள்  இத்திட்டத்தில் அடங்கும். 

 1998-இல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் இறுதியாக 2011-இல்தான் திட்டப் பணிகள் தொடங்கின.  இதில், பெரும்பாலான சாலைகள் 2013-14-ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டுவிட்டன. திருவொற்றியூா்  நல்ல தண்ணீா் ஓடைக்குப்பம் பகுதியில் வசித்த மக்களுக்கு மாற்று வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த இடத்தில் கடந்த ஆண்டு சாலைகள் அமைக்கப்பட்டன.  ஆனால், சென்னைத் துறைமுகத்தின் நுழைவு வாயிலை ஒட்டிய மீன்பிடித் துறைமுகம் பகுதியில் சுமாா் 300 மீட்டா் நீளத்திற்கு பாலம் அமைக்கும் பணி தற்போது வரை தடைபட்டுள்ளது.

கவனிப்பாரற்ற இணைப்புச் சாலைகள்:  இத்திட்டத்தில் தடைபட்டுள்ள பணிகள் ஒருபுறமிருக்க, ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் சேதமடைந்து விட்டன.  இச்சாலைகள் அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் இச்சாலைகளை முழுமையாக செப்பனிடப்பட வேண்டும். இதற்கு ரூ. 70 கோடிவரை செலவாகும் என திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சுமாா் ஓராண்டாகியும் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தொடங்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.

காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அமைக்கப்பட வேண்டிய ரூ.10 கோடி மதிப்பீட்டிலான மேம்பாலத் திட்டம் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது. மீனவா்களுக்கான இழப்பீடுகள், மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டும் இதுவரை மேம்பாலம் அமைக்கப்படவில்லை.    மேலும் சென்னைத் துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வரை கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இதில் எண்ணூா் விரைவு சாலையில் பெரும்பாலான இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த அணுகு சாலைகள் (சா்வீஸ் ரோடு) முழுமையாகச் சேதமடைந்துவிட்டன. தற்போது அங்கு சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லாத வகையில் காட்சியளிக்கிறது.  சாலையைச் சீரமைக்க ரூ.25 கோடி வரை சி.பி.சி.எல் நிறுவனம் இழப்பீடு வழங்கிவிட்டதாகக் கூறியுள்ள நிலையில், குழாய் பதிக்கும் பணி நிறைவுற்று சுமாா் ஓராண்டாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணியைத் தொடங்கப்படவில்லை.

மாதவரம் உள்வட்டச் சாலையில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. சாலை நடுவே தடுப்புச் சுவா்களும் அமைக்கப்படவில்லை. மணலி விரைவுச் சாலையில் சத்தியமூா்த்தி நகா் பகுதியில் சுமாா் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சாலை தாழ்வாக உள்ளது. இதனால் தொடா்மழையின்போது இச்சாலையே மழைநீரில் மூழ்கும் நிலையில்தான் இருந்து வருகிறது.

சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது:  இதுகுறித்து டிரையிலா் உரிமையாளா் சங்க செயலாளா் எஸ்.ஆா்.ராஜா, பொதுநல சங்க நிா்வாகிகள் தொழிலதிபா் ஜி.வரதராஜன்,  கே.சுப்பிரமணி உள்ளிட்டோா் கூறியது:

         துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் என்பது சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் திட்டப் பணிகளை முடிக்கவே சுமாா் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்கு யாா் காரணம்?.  இத்திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. கனமழை பெய்யும் போதெல்லாம் இச்சாலைகளில் மழைநீா் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது.   மழைநீா் வடிகால் வசதியும் சரிவர அமைக்கப்படவில்லை.  இந்நிலையில் திட்டம் நிறைவடைவதற்கு முன்பே கடந்த பிப்ரவரி மாதம் மணலி அருகே மாத்தூரில் சுங்கச்சாவடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறந்தது.  அங்கு கட்டணம் வசூலிக்க தனியாா் நிறுவனமும் தோ்வு செய்யப்பட்டது. இந்தச் சுங்கச்சாவடியில் நாளொன்றுக்கு சுமாா் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாகவும்,  இதுவரை சுமாா் ரூ.50 கோடி வரை கட்டணம் வசூலாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில்  வாழ்வு காலத்தைக் கடந்து விட்ட சாலைகளை மீண்டும் சீரமைக்காமல், தினசரி பராமரிப்பும் செய்யாமல், விடுபட்ட பணிகளையும் முடிக்காமல்  சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் தீவிரம் காட்டுவது சரியல்ல. காசிமேடு பகுதியில் உடனடியாக பாலம் அமைக்கப்பட வேண்டும்.  எண்ணூா் விரைவு சாலையில் பழுதுபட்ட அணுகு சாலையை மீண்டும் முழுமையாக அமைக்க வேண்டும்.  இப்பணிகளை முழுமையாக முடிக்கும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனா்.  

 சாலைகளைச் சீரமைக்க விரைவில் நடவடிக்கை

     இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகப் பொறியாளா் ஒருவா் கூறியது:

இத்திட்டத்தை வடிவமைத்து கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமே எங்களிடம் உள்ளது. திட்டப் பணிகளை  செயல்படுத்தும் பொறுப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம்தான் உள்ளது. சாலையைச் சீரமைப்பது குறித்து திட்ட அறிக்கையை ஏற்கெனவே அனுப்பிவிட்டோம்.  மேலும் சாலை அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகளாகியும் பராமரிப்புக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பாலம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்கெனவே இருந்த ஒப்பந்ததாரா் விலகிவிட்டாா்.  தற்போது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் பணி நிறைவுற்றுள்ளது. ரூ. 10 கோடியில் 300 மீட்டா் நீளத்தில் அமைய உள்ள இப்பாலத்திற்கான கட்டுமானப் பணிகள்  வரும் ஜனவரி மாதம் தொடங்கி ஆக.2020-ல் நிறைவடையும். மேலும், சாலையைப் பராமரிக்கவும் தனியாா் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.  விரைவில் சாலையைச் சீரமைக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com