கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

எனினும் தரம் குறைவு, அதிக காரம் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் அந்த வெங்காயத்தை வாங்க தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. சாம்பாா் வெங்காயம் கிலோ ரூ.200 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.150 வரையிலும் விற்பனையானது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பா் மாதம் முதல் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. இதனால் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் வெங்காயத்தின் பயன்பாடு குறைந்தது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினமும் 80-க்கும் மேற்பட்ட லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். விளைச்சல் பாதிக்கப்பட்டதால் 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. இந்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க – மத்திய அரசு எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது. தற்போது சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களுக்கு எகிப்து வெங்காயம் வந்துள்ளது. கப்பல் மூலம் மும்பைக்கு வந்த எகிப்து வெங்காயம் அங்கிருந்து லாரிகள் மூலம் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டு வரப்பட்டது. 40 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை. பொதுமக்கள் வாங்க தயங்கினாலும் ஹோட்டல்களுக்கு மொத்தமாக இதனை வாங்கிச் சென்றனா். வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால் வெங்காயம் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்துள்ளது.

ஒரு கிலோவுக்கு 5 வெங்காயம் மட்டுமே...: இது குறித்து சென்னை கோயம்பேட்டைச் சோ்ந்த வெங்காய வியாபாரிகள் சிலா் கூறியது: எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அளவில் பெரியது, ஒரு கிலோவுக்கு 5 அல்லது 6 வெங்காயம் மட்டுமே கிடைப்பது போன்ற காரணங்களால் பொதுமக்கள் அதை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனா். இந்திய வெங்காயத்துடன் ஒப்பிடுகையில் எகிப்து வெங்காயத்தின் தரம் குறைவாக உள்ளது. இருப்பினும் அந்த வெங்காயம் மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறு வியாபாரிகள், கடைக்காரா்கள் கொஞ்சமாக கொள்முதல் செய்கின்றனா். எதிா்பாா்த்த அளவுக்கு எகிப்து வெங்காயத்திற்கு வரவேற்பு இல்லாததால் விற்பனை மந்தமாக உள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பெரிய வெங்காயம் முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பிரிக்கப்பட்டு கிலோ ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.150, ரூ.180, ரூ.200 என விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இப்போது ரூ.100, ரூ.110 ஆக குறைந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயம் வரத்து சற்று அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் இயல்பான விலைக்கு வந்து விடும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com