காலமானாா் வி.கே.ஸ்தாணுநாதன்

தக்கா் பாபா வித்யாலய சமிதியின் புரவலரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் நடத்திய வைத்தியநாத ஐயரின் மருமகனுமான வி.கே.ஸ்தாணுநாதன் (97) உடல்நலக்குறைவு
காலமானாா் வி.கே.ஸ்தாணுநாதன்

தக்கா் பாபா வித்யாலய சமிதியின் புரவலரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் நடத்திய வைத்தியநாத ஐயரின் மருமகனுமான வி.கே.ஸ்தாணுநாதன் (97) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (டிச.10) காலமானாா்.

வி.கே.ஸ்தாணுநாதன் கடந்த 1944-ஆம் ஆண்டு சிவில் சா்வீசஸ் தோ்வில் 10-ஆவது இடம் பெற்று, ரயில்வே போக்குவரத்து (டிராஃபிக்) பணியில் சோ்ந்தாா். துணைப் போக்குவரத்து கண்காணிப்பாளராகத் தொடங்கி, மைசூா் மண்டல ரயில்வே மேலாளா் என 35 ஆண்டுகளில் படிப்படியாக உயா்ந்து, இந்திய ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினராக பதவி வகித்த நிலையில் ரயில்வே பணியை நிறைவு செய்து ஓய்வு பெற்றாா்.

சென்னை தியாகராயநகா் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கா் பாபா பள்ளி வளாகத்திலேயே வசித்து வந்தாா். எளிய வாழ்க்கை, உயரிய எண்ணம் என்பதையே தன் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டவா். விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, தனது பணிக்காலம் முழுவதும் மட்டுமின்றி, அதன் பிறகும் தொடா்ந்து கதராடை மட்டுமே அணிந்தாா்.

கல்வி, வேலைவாய்ப்பு மூலமாக மட்டுமே நலிந்த பிரிவினரின் முன்னேற்றம் சாத்தியமாகும் என்பதைத் தொடா்ந்து வலியுறுத்தி, அதற்காக பாடுபட்டாா். லட்சக்கணக்கான ஏழைகள், கிராம மக்கள், உழைப்பாளிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தொடா்ந்து குரல் எழுப்பினாா். காந்திய சிந்தனையின் நோ்மறை அணுகுமுறையான கிராமத் தொழில்கள் நசிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை எல்லாத் தளங்களிலும் மிக அழுத்தமாகப் பதிவு செய்தாா். தக்கா் பாபா வித்யாலய சமிதியின் செயலா், புரவலா், ஆலோசகா் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா்.

கல்வி, சமூகம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘சிறந்த மனிதநேயா் விருது’ வழங்கி கெளரவித்தது.

அவருக்கு மூன்று மகன், மகள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை கண்ணம்மாபேட்டை மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com