கடன் தருவதாக பொதுமக்கள் வங்கிக்கணக்கில் இருந்து பல கோடி திருட்டு: போலி கால் சென்டர் நடத்திய 7 பேர் கும்பல் சிக்கியது

சென்னையில் போலி கால் சென்டர் மூலம் கடன் தருவதாகப் பேசி பொதுமக்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பல கோடி திருடிய 7 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.


சென்னையில் போலி கால் சென்டர் மூலம் கடன் தருவதாகப் பேசி பொதுமக்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பல கோடி திருடிய 7 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் ஒரு கும்பல் பொதுமக்களின் செல்லிடப்பேசியை தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், கடன் தருவதற்கு முன்பு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வைத்திருக்க வேண்டும் என கூறியதோடு, வங்கிக்கணக்கு எண், பற்று அட்டை எண், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்துக்கொண்டு, அந்தப் பணத்தை மோசடி செய்துவந்தது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறைக்கு கடந்த இரு மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன் மற்றும் போலீஸார் விசாரணை செய்தனர்.
9 அலுவலகங்களில் 125 ஊழியர்கள்: விசாரணையில், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வடபழனி, ஆவடி, சூளைமேடு, ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட 9 இடங்களில் அந்தக் கும்பல் 6 போலி நிறுவனங்களை நடத்தி வருவதும், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டையில் கால்சென்டர் நடத்தி வருவதும், அங்கிருந்து திரட்டப்படும் தகவல்கள் மூலம் ஆசை காட்டி மோசடி செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், இந்த மோசடி நிறுவனங்களில் 70 பெண்கள் உள்பட 125 பேர் பணிபுரிந்து வருவதும், கடந்த ஓராண்டில் இவ்வாறு பல கோடி ரூபாயை பறித்திருப்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது.
7 பேர் சிக்கினர்: இந்நிலையில் இந்த நிறுவனங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் அங்கிருந்த அனைவரையும் பிடித்தனர். மேலும் அங்கிருந்த ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நபர்களை தவிர்த்து பிற ஊழியர்கள் அது போலி நிறுவனம் என்பதை அறிந்திருக்கவில்லை என்று தெரியவந்தது. இதனால் அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த சென்னை கொண்டிதோப்பைச் சேர்ந்த ந.வெங்கடேஷ்  (32), பட்டாளத்தைச் சேர்ந்த செ.சார்லஸ் (27), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த க.கிருஷ்ணகுமார் (26), சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சு.சதீஷ் (28), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த செ.விக்னேஷ் (30), பரமத்திவேலூரைச் சேர்ந்த பெ.பூபதி (28), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த ர.திராவிட அரசன் (25) ஆகிய 7 பேரை மட்டும் போலீஸார் கைது செய்தனர். 
5 குழுக்களாக கைவரிசை:  கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த விவரங்கள்:
இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் 5 குழுக்களாக இயங்கி உள்ளனர். மேலும், வேலைக்கு ஆள்களை சேர்த்து, மாதம் ரூ. 8 ஆயிரம் ஊதியம் வழங்கியுள்ளனர். 
மேலும், தினமும் 400 பேரிடம் செல்லிடப்பேசி மூலம் தொடர்புகொண்டு, அவர்களை பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் பணியாளர்களை 3 மாதங்களுக்கு மேல் வேலையில் வைத்திருக்காமல், வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.
தினமும் ரூ.5 லட்சம் மோசடி: இது தொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு அளித்த பேட்டி:
ஏற்கனெவே ஒரு நிதி நிறுவனத்தில் செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டு, இந்த மோசடி கும்பல் செயல்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு தொடங்கும்போது போலி முகவரியே கொடுத்துள்ளனர். 
இப்போது அவர்களது 45 வங்கிக்கணக்குகளில் இருக்கும் சுமார் ரூ.30 லட்சத்தை முடக்குவதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் இந்தக் கும்பலின் தலைவனாக செயல்பட்ட ஒரு நபர் உள்பட 5 பேரை தேடி வருகிறோம் என்றார் அவர்.
இந்தக் கும்பலிடமிருந்து 200 செல்லிடப்பேசிகள், 10 மடிக்கணினிகள், 45 வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com