சட்டவிரோத பேனர் விவகாரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆஜராக உத்தரவு
By DIN | Published On : 28th February 2019 04:12 AM | Last Updated : 28th February 2019 04:12 AM | அ+அ அ- |

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிகளுக்குப் புறம்பாக பேனர்கள் வைத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் மார்ச் 13-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விதிகளுக்கு முரணாக சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த சட்ட விரோத பேனர்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு இடங்களில் விபத்துகளும் நடக்கின்றன. எனவே, இந்த சட்ட விரோத பேனர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட சட்ட விரோத பேனர்கள் விவகாரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பது இன்னும் தொடர்கிறது. ஆனாலும் அரசு இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் கஷ்டப்பட்டுத்தான் பாடம் கற்றுக்கொள்ளும் போல தெரிகிறது என கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பேனர்களை வைத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் மார்ச் 13-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.