ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: அபராதமாக ரூ.18 லட்சம் வசூல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகளை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: அபராதமாக ரூ.18 லட்சம் வசூல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகளை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இதுபோல விதிமுறைகளை மீறிய ஆம்னி பேருந்து நிறுவனங்களிடமிருந்து இதுவரை ரூ. 18 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகளை, சென்னையில் 5 இடங்களில் இருந்து ஜனவரி 11 ஆம் தேதி முதல் தமிழக அரசு இயக்குகிறது.
 அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1,61,685 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து 65,115 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து 96,570 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், 2 இலட்சத்து 75 ஆயிரத்து 889 பயணிகள் மொத்தமாக பயணம் செய்துள்ளனர். முன்பதிவு மூலம் ரூ. 7 கோடியே 75 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த நிலையில், சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படுகின்றனவா? பணிகள் நெரிசலைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பன குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நள்ளிரவு வரை நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதுபோல, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நள்ளிரவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
 அப்போது அவர் அளித்த பேட்டி:
 சென்னையிலிருந்து 6 லட்சம் பயணிகள் இந்த பண்டிகை காலங்களில் பயணம் செய்திட ஏதுவாக அனைத்துவகையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக இதுவரை 861 பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் அபராதக் கட்டணமாக ரூ. 18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் வரியை முறையாகச் செலுத்தாத பேருந்து நிறுவனங்களிடமிருந்து ரூ. 3.15 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
 11 பேருந்துகள் சிறைபிடிப்பு: மேலும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 11 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. கூடுதல் கட்டண வசூல் போன்ற புகார்களை 1800-425-6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.
 கட்டுப்பாட்டு அறை: போக்குவரத்து நெரிசலை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
 புறநகர் பகுதிகளில் குறிப்பாக பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கின்ற வகையில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அலுவலர்களும், காவல்துறையினரும் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com