நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த ரௌடி வெட்டிக் கொலை: சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்

சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து


சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் நடைபெற்ற இச் சம்பவத்தினால், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் பா.குமரேசன் (37). இவர் மீது கடந்த 2015ஆம் ஆண்டு யுவராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு உள்பட இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. மேலும் கஞ்சா வியாபாரியான அவர் மீது அடிதடி,கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் குமரேசன், பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெறும் யுவராஜ் கொலை வழக்கு விசாரணையில் திங்கள்கிழமை ஆஜராக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சூளைமேடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர், அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் குமரேசனை திடீரென அரிவாளால் வெட்டினர். அவர்களிடமிருந்து குமரேசன் தப்பியோட முயன்றார். ஆனால் அந்த நபர்கள், குமரேசனை விரட்டிச் சென்று ஒரு வங்கியின் அருகே மீண்டும் அரிவாளால் வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த குமரேசன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதற்கிடையே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமரேசனை அங்குள்ளவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குமரேசனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தனியார் கல்லூரிக்கு மிக அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் பொதுமக்களிடமும், காவல்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கொலையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் குமரேசன் கொலை செய்யப்படும் 
காட்சிகளையும், அவரை கொலை செய்த நபர்கள் தப்பியோடும் காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக சகாயம், பாம்பு வினோத் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com