நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம்: செவிலிய மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து செவிலிய மாணவிகள் அரசு மருத்துவமனைகளுக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து செவிலிய மாணவிகள் அரசு மருத்துவமனைகளுக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 1,500-க்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (65).  இவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி கஸ்தூர்பா காந்தி அரசு பொது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். வைரஸ் காய்ச்சல் அவருக்கு இருந்ததாகவும், அதற்கு மருத்துவர்கள் கடந்த 10 நாள்களாக சிகிச்சையளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் அந்தோணியம்மாளுக்கு செவிலிய மாணவிகள் ஊசி மூலம் ஒரு மருந்தினை செலுத்தியுள்ளனர்.  
அடுத்த சில நிமிடங்களில் அவர் சுயநினைவை இழந்து மூர்ச்சையாகிவிட்டதாகத் தெரிகிறது. மருத்துவர்கள் உடனடியாக விரைந்து வந்து பரிசோதித்து பார்த்ததில் அந்தோணியம்மாள் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதய செயலிழப்பு காரணமாக அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், தவறான மருந்தைச் செலுத்தியதன் காரணமாகவே அந்தோணியம்மாள் உயிரிழந்ததாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
அதன் தொடர்ச்சியாக செவிலிய மாணவிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், அதில் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரியும் செவிலிய மாணவிகள்  வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 1,500-க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் தெரிவித்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com