கொரட்டூர், அம்பத்தூர் ஏரிக்கரைகளில் ரூ.13 கோடியில் நடைப்பயிற்சிப் பாதைகள்

சென்னை கொரட்டூர், அம்பத்தூர் ஏரிகளை மேம்படுத்தும் வகையில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 13 கோடி மதிப்பில் நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அம்பத்தூர் ஏரிக் கரையில் அமைக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கான நடைப்பயிற்சி பாதை.  
அம்பத்தூர் ஏரிக் கரையில் அமைக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கான நடைப்பயிற்சி பாதை.  

சென்னை கொரட்டூர், அம்பத்தூர் ஏரிகளை மேம்படுத்தும் வகையில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 13 கோடி மதிப்பில் நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் கொரட்டூர், அம்பத்தூர் ஏரிகள் அமைந்துள்ளன. இதில், கொரட்டூர் ஏரி 600 ஏக்கர் பரப்பளவிலும், அம்பத்தூர் ஏரி 380 ஏக்கர் பரப்பளவிலும் பரந்துவிரிந்து உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கொரட்டூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், கங்கை நகர் பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளும், அம்பத்தூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து அயப்பாக்கம் சாலையில் கட்டப்பட்டிருந்த வீடுகளும் வருவாய்த் துறையால் கடந்த 2018-ஆம் ஆண்டு அகற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த ஏரிக்கரைகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாத வகையில், ஏரிக்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, சுற்றுச்சூழல் துறையின் ரூ. 13 கோடி நிதி உதவியில் பொதுப்பணித் துறை மூலம் கொரட்டூர், அம்பத்தூர் ஏரிக் கரைகளில் நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரட்டூர், அம்பத்தூர் ஏரிக்கரைகளில் நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், கொரட்டூர் ஏரிக்கரையில் ஒண்டிவீரன் கோயிலில் இருந்து கலங்கல் பகுதி வரை 3 கி.மீ. தொலைவுக்கும், அம்பத்தூர் ஏரிக்கரையில் அயப்பாக்கம் ஊராட்சியின் தொடக்கத்தில் இருந்து அன்னை சத்யா நகர் வரை 1.50 கி.மீ. தொலைவுக்கும் நடைப்பயிற்சிப் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த நடைபாதைகளின் இருபுறங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. நடைப்பயிற்சிப் பாதை முழுவதும் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட உள்ளன. கொரட்டூர் ஏரிக்கரையில் நடைப்பயிற்சி பாதை அமைக்கும் பணிகள் பாதியளவு நிறைவடைந்துள்ளன. அம்பத்தூர் ஏரிக்கரையில் நடைப்பயிற்சி பாதைப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, வரும் ஜூலை மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com