குப்பை கிடங்காக மாறி வரும் வட சென்னை கடற்கரைப் பகுதி

தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் கட்டட கழிவுகள், குப்பைகளால் வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர்வரை உள்ள கடற்கரை பகுதி
குப்பை கிடங்காக மாறி வரும் வட சென்னை கடற்கரைப் பகுதி


தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் கட்டட கழிவுகள், குப்பைகளால் வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர்வரை உள்ள கடற்கரை பகுதி முற்றிலும் சீர்கேடு அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 
முன்பு கடற்கரை கிராமங்களாக இருந்த  மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்னை பட்டனம், ராயபுரம், வண்ணையம்பதி, திருவொற்றியூர் உள்ளிட்டவைதான் முதலில் சென்னை மாநகரத்தின் பழமையான பகுதிகளாகும். 
சிறு படகுத் துறையாக இருந்த மெரீனா இன்று ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. 
லட்சக்கணக்கான மக்கள் காற்று வாங்கும் இடமாக மெரீனா மாறியுள்ளது. மெரீனா, பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளை பராமரிக்க, அழகுபடுத்த என சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் கணிசமான தொகையைச் செலவு செய்கிறது. ஆனால், வடசென்னை கடற்கரைப் பகுதியில் பல்வேறு வகையான குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் கடற்கரையே சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.  
மலைபோல் குவியும் கட்டடக் கழிவுகள்:  நெரிசலான வீடுகள், குறுகலான தெருக்கள் நிறைந்த வடசென்னை பகுதியில் கட்டடப் பணிகளின் போது வெளியேற்றப்படும் கட்டடக் கழிவுகள் ஆங்காங்கு கொட்டுவது வழக்கமானது. 
கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் ஏற்கெனவே ஏராளமான இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.  இதனையடுத்து கட்டடக் கழிவுகளை சாலைகளில் கொட்டுவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் அபராதம் உள்ளிட்டவை விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையடுத்து கட்டடக் கழிவுகளை சிறிய ரக சரக்கு வாகனங்கள் மூலம் வெகுதூரம் எடுத்துச் சென்று கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவ்வாறான கழிவுகள் பலகை தொட்டிக்குப்பம், திருச்சினாங்குப்பம், செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. 
மேலும், மெட்ரோ ரயில் பாதை தூண்கள் அமைப்பதற்கான பணிகளின்போது வெளியேற்றப்படும் கழிவுகளும் இங்குதான் கொட்டப்படுகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் மலைபோல் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன.
பருப்பு ஆலை கழிவுகள்: வடசென்னை பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட பருப்பு ஆலைகள் உள்ளன. பயறு வகைகளிலிருந்து பருப்பு தயாரிக்கும்போது வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக குப்பைக் கிடங்களுக்குக் கொண்டு சென்று கொட்டப்பட வேண்டும். 
ஆனால் இதற்கு நேரமும், வாடகை அதிகம் இருக்கும் என்பதால் அருகில் உள்ள கடற்கரை பகுதிகளில் கொட்டப்படுகின்றன.  மேலும் இறைச்சி கழிவுகள், பல்வேறு ஆலைக்கழிவுகள் காசிமேடு முதல் எண்ணூர் வரை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு வண்டுகள், புழுக்கள் உருவாகி இப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், எங்கிருந்தோ கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளை சிலர் தீ வைத்து எரித்துவிட்டுச் செல்கின்றனர்.
திறந்தவெளி கழிப்பிடமாகும் கடற்கரை: கடற்கரையை ஒட்டி, எண்ணூர் விரைவுச் சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் சென்னைத் துறைமுகம் செல்ல நூற்றுக்கணக்கான லாரிகள் மணிக்கணக்கில் எர்ணாவூர் வரை காத்திருக்கின்றன.
 இந்த லாரிகளின் ஓட்டுநர்கள் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு கடற்கரையையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ராமகிருஷ்ணா நகர், நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரையே திறந்தவெளி கழிப்பிடமாக இருந்து வருகிறது. 
இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் முகம்சுழிக்கும் நிலை உள்ளது. மேலும், ஈமச்சடங்கு செய்வதற்காக புனித இடமாக போற்றப்படும் இக்கடற்கரைக்கு வருவோர், ஏன் வந்தோம் என்று கருதும் அவல நிலையில்தான் இப்பகுதி உள்ளது. 
கடற்கரை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும்: இதுகுறித்து வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பு மூத்த நிர்வாகிகள் தொழிலதிபர் ஜி.வரதராஜன், சென்னை பசுமை இயக்க நிர்வாகிகள் சுப்பிரமணி, மதியழகன் உள்ளிட்டோர் கூறியது, 
       காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் நிறைந்த அழகிய கடற்கரைகள் முன்பு இருந்தன. 
மேலும் காசி விசுவநாதர் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தியர் கோயில், ராமலிங்கர்மடம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், அகலமான மணல் பரப்பும், மரங்கள் அடங்கிய தோப்புகளும் இக்கடற்கரைக்கு முன்பு அழகு சேர்த்துள்ளன.  இப்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட கடலரிப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலம் கடலால் காவு கொள்ளப்பட்டு விட்டது.  புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் கடலரிப்பில் காணாமல் போய்விட்டது.  
இந்நிலையில் மாதங்களுக்கு முன்பு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு மேலும் சீரழிவுக்கு உள்ளானது இப்பகுதி.  
இந்நிலையில் தற்போது கட்டடக் கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடங்களாக மாறி வருவது இப்பகுதி மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.   எனவே இது குறித்து மாநகராட்சி ஆணையர் தலையிட்டு இக்கடற்கரையை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையை சீரழிவுக்கு உள்ளாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com