குடிக்க, சுத்தம் செய்ய இல்லை தண்ணீர்

சென்னையில்குடிநீர்த் தட்டுப்பாடு தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. குடிக்க, சுத்தம் செய்ய அடிப்படைத் தேவை களுக்குக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்று குடிசைப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.டி. சாலையில் ஞாயிற்றுக்கிழமை லாரியில் வந்த குடிநீரைப் பிடிக்க காத்திருக்கும் கூட்டம்.
சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.டி. சாலையில் ஞாயிற்றுக்கிழமை லாரியில் வந்த குடிநீரைப் பிடிக்க காத்திருக்கும் கூட்டம்.

சென்னையில்குடிநீர்த் தட்டுப்பாடு தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. குடிக்க, சுத்தம் செய்ய அடிப்படைத் தேவை களுக்குக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்று குடிசைப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தாலும் ஜூன் முதல் வாரத்துக்குப் பிறகு அதாவது குடிநீர் ஆதார ஏரிகளில் முற்றிலுமாக வறண்ட பின்னர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாட்டால் குடிசைப் பகுதிகளில் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் ,  வேலைக்காக வெளியூர்களிலிருந்து வந்திருந்து சென்னையில் தங்கியிருக்கும் ஏராளமான இளைஞர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து ஓட்டேரியைச் சேர்ந்த அன்னலட்சுமி,  சைதாப்பேட்டையைச் சேர்ந்த பழனியப்பன்,  கிரீம்ஸ்சாலையைச் சேர்ந்த பூங்கொடி என பல்வேறு குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த  மக்கள் கூறியது:  சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானம்,  தொழிற்சாலை,  தள்ளுவண்டிக் கடைகள்,  தினசரி சந்தைகள் என தினக்கூலி அல்லது சிறுதொழில்களில் ஈடுபட்டு வருகிறோம்.  எங்கள் பகுதிக்கு குடிநீர் வாரியம் சார்பில் அனுப்பப்படும் லாரிகள் மூலமாக காலை அல்லது மாலை என குறிப்பிட்ட நேரங்களில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.  

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் குடிநீர் லாரிகள் பெரும்பாலும் மதிய நேரத்தில்தான் வருகின்றன. அந்த நேரத்தில் நாங்கள் வேலைக்குச் சென்று விடுவதால் குடிப்பதற்கு கூட தண்ணீரைப் பெற முடிவதில்லை. சில நாள்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாலும் குடிநீர் லாரிகளில் தண்ணீர் பிடிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு லாரி வந்தாலே அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விடுகின்றனர். அதில் அரசியல் பிரமுகர்கள் தலையீடு அதிகம் இருப்பதால் எங்களுக்கு மூன்று குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை.  

 தெருத்தெருவாக அலைகிறோம்...: இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி தனியார் குடிநீர் லாரிகள் ஒரு குடம் தண்ணீரை ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்கின்றனர்.  சென்னையில் மத்தியப் பகுதியில் நூற்றாண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் குடிசைப் பகுதி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்காவது குடிநீரை விநியோகிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் பிள்ளைகளிடம் கூட குடிப்பதற்கு நீரை எடுத்து வரச் சொல்வதால்,  எங்காவது தண்ணீர் கிடைக்காதா என குடங்களைச் சுமந்தபடி தெருத்தெருவாக அலைகிறோம். இந்தப் பிரச்னைக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் மறியலில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர். 

கூடுதல் லாரிகள் அனுப்ப நடவடிக்கை:  இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது,  தொழில்நிறுவனங்களுக்கு அனுப்பும் தண்ணீரைக் கூட குறைத்து விட்டு ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை அதிகரித்துள்ளோம். 

இருப்பினும் ஒதுக்கீடு அடிப்படையில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது.  இது குறித்து பொதுமக்கள் கவலை அடையத் தேவையில்லை. வரும் நாள்களில் அடையாறு,  சைதாப்பேட்டை,  கோயம்பேடு என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு குடிநீர் லாரிகள் அதிகளவில் அனுப்பப்படும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com