ஓட்டேரியில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 18th June 2019 04:19 AM | Last Updated : 18th June 2019 04:19 AM | அ+அ அ- |

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் தன்ராஜ் (40). பால் வியாபாரி. இவரது மனைவி தீபா (35). இந்தத் தம்பதியின் மகன் லோகேஷ். அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை லோகேஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று விட்டார். இதையடுத்து மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தன்ராஜ், தீபா இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தன்ராஜ் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சச்சரவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இதேபோன்று குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால் விரக்தியடைந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.