குழந்தைகள் காப்பகத்தில் அத்துமீறி சோதனை: காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 23rd June 2019 04:25 AM | Last Updated : 23rd June 2019 04:25 AM | அ+அ அ- |

குழந்தைகள் காப்பகத்தில் அத்துமீறி சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாக உதவியாளர் ரேச்சல் கலைச்செல்வி மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2012}ஆம் ஆண்டு ஜனவரி 3}ஆம் தேதி, சோமங்களம் உதவி ஆய்வாளர் சின்னதுரை மற்றும் சிலர் எங்கள் காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
ராஜேந்திரன் மற்றும் வளர்மதி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்ய வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் ஏற்கெனவே தொழிலாளர் நலத்துறையில் புகார் அளித்திருப்பதாகவும், அந்த வழக்கு இன்னும் 2 நாள்களில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் நான் கூறினேன்.
நான் தடுத்த போதும் வந்திருந்த அனைவரும் கழிப்பறை உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். எனக்கு வழக்கு குறித்து எந்த வித அழைப்பாணையும் வராத நிலையில், காவல் துறையினரின் இந்த மனித உரிமையை மீறும் செயலுக்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
ரூ.50 ஆயிரம் அபராதம்: இந்த மனுவானது மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரேச்சல் கலைச்செல்விக்கு தமிழக அரசு ரூ.50 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்கி விட்டு அதனை சோமங்களம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னதுரையிடம் வசூல் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.