தண்ணீர்ப் பிரச்னையை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
By DIN | Published On : 23rd June 2019 04:37 AM | Last Updated : 23rd June 2019 04:37 AM | அ+அ அ- |

தண்ணீர்ப் பிரச்னையைக் காரணம் காட்டி விடுமுறை அறிவித்தால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதாக பள்ளி நிர்வாகி உறுதி அளித்த பிறகுதான் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது சில தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என தெரிவித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக தெரிய வருகிறது. மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் இவ்வாறு விதிகளுக்கு முரணாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மேலும், தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளி தொடர்ந்து நடைபெற தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் கடமையாகும். அவ்வாறு செயல்பட தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை விடப்படாமல் தொடர்ந்து செயல்படுவதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.