இளைஞரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்: ஹரியாணாவைச் சேர்ந்த 3 பேர் கைது

சென்னை அருகே பூந்தமல்லியில் இளைஞரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை அருகே பூந்தமல்லியில் இளைஞரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பூந்தமல்லி செந்நீர்குப்பத்தைச் சேர்ந்தவர் குல்பீர்சிங் (34). இவர் அங்கு பார்சல் சேவை நிறுவனத்தின் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். 
இந்நிலையில், பார்சல் சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 60 பார்சல்களை அந்த லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் ஹரியாணா மாநிலம் குருகிராமுக்கு அண்மையில் குல்பீர்சிங் அனுப்பியிருந்தார். 
ஆனால் இதில் இரு பார்சல்கள் மட்டும் அங்கு கிடைக்கவில்லையாம். இதனால், அந்த  லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.7 ஆயிரத்தை குல்பீர்சிங் நிறுத்தி வைத்தார்.
 இது தொடர்பாக குல்பீர்சிங்குக்கும், லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் நிர்வாகி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுனில்குமார் (28) என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். இந்நிலையில் சுனில்குமார், தனது கூட்டாளிகளான ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் (22), அக்ஷய்குமார் சந்தாலியா (20) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை குல்பீர்சிங் அலுவலகத்துக்குச் சென்றார்.
அங்கு அவர்கள், குல்பீர்சிங்கிடம் தங்களுக்குத் தர வேண்டிய பணத்தை தரும்படி தகராறு செய்தனராம். தகராறு முற்றவே, ராகுல் தன்னிடம் இருந்த துப்பாக்கியை குல்பீர்சிங் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார். மேலும் அவர்கள், பீரோவில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து குல்பீர்சிங், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் தலைமையிலான போலீஸார் சுனில்குமார், ராகுல், அக்ஷய்குமார் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். இதில் ராகுல் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும், 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ராகுல் பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பலிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com