அழகு நிலையத்தில் முகமூடி கொள்ளை: இருவர் கைது
By DIN | Published On : 02nd March 2019 03:16 AM | Last Updated : 02nd March 2019 03:16 AM | அ+அ அ- |

சென்னை கொளத்தூரில் அழகு நிலையத்தில் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கொளத்தூர் ஸ்ரீகணேஷ்நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சாவித்திரி (37). கடந்த 25-ஆம் தேதி இந்த அழகு நிலையத்துக்குள், முகமூடி அணிந்து வந்த இரு நபர்கள் அத்துமீறி நுழைந்தனர்.அங்கு அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, சாவித்திரி, அழகு நிலைய ஊழியர்கள் வீரகுமார், ஜெமிலா ஆகியோர் அணிந்திருந்த தங்கநகை என மொத்தம் 10 பவுன் தங்கநகை, 6 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு இருவரும் தப்பியோடினர்.
இது குறித்து சாவித்திரி, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், இந்த கொள்ளையில் ஈடுபட்டது புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (30), திரு.வி.க.நகர் திருவள்ளுவர் குறுக்குத் தெருவைச் சேர்ந்த அப்பாஸ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.