துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சாவு
By DIN | Published On : 24th March 2019 03:52 AM | Last Updated : 24th March 2019 03:52 AM | அ+அ அ- |

சென்னையில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு, தற்கொலைக்கு முயன்ற காவலர், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருநெல்வேலி மாவட்டம் ஆர்.என்.குளம் அருகே உள்ள கருங்கல்நாடார்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சரவணன் (29). இவர் சென்னை பெருநகரக் காவல்துறையின் புதுப்பேட்டை ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சரவணன், ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீட்டு பாதுகாப்புப் பணியில் கடந்த புதன்கிழமை ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்குள்ள காவலர் அறையில் சரவணன், தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கியால் தனது தலையில் வைத்து சுட்டுள்ளார். இதைப் பார்த்த பிற காவலர்கள், சரவணனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சரவணன் சனிக்கிழமை இறந்தார். இச் சம்பவம் காவல்துறை அதிகாரிகளிடமும், காவலர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணிச்சுமையின் காரணமாக சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.