தண்டு வட வாத நோய்: காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முடியவில்லை என புகார்

தண்டு வடத்தை தாக்கும் வாத நோய்க்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற இயலாத நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த வகை நோய்க்கான மருந்தின் விலை மிகவும் அதிகம்


தண்டு வடத்தை தாக்கும் வாத நோய்க்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற இயலாத நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த வகை நோய்க்கான மருந்தின் விலை மிகவும் அதிகம் என்பதால் ஏழை - எளிய மக்கள் உரிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள இயலாத சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தண்டுவட வாதம் என்பது 20 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு வரக்கூடிய ஒரு வகை பாதிப்பாகும். அந்தப் பாதிப்பு ஏற்பட்டால் கழுத்தில் இருந்து இடுப்பு வரை உள்ள தண்டு வடப் பகுதி நெகிழ்வுத் தன்மையை இழந்து இறுகிவிடும்.
அது தீவிரமடையும்பட்சத்தில் முடக்குவாதம் போன்று எழுந்து நடமாட இயலாத நிலை ஏற்பட்டு விடும். தண்டு வட வாத நோயால் பெரும்பாலும், ஆண்களே பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது எதிர் வினையாற்றி நமது உறுப்புகளையே சில நேரங்களில் பாதிக்கும். அந்தத் தருணங்களில் தண்டு வட வாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதுகுறித்த உரிய விழிப்புணர்வோ, புரிதலோ மக்களிடையே இல்லை எனத் தெரிகிறது. தண்டு வட வாத நோய்க்கு ஆளானால், அதற்கான சிகிச்சைகளுக்கும், மருந்துகளுக்கும் மாதந்தோறும் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.1.50 லட்சம் வரை செலவாகும்.
அதுமட்டுமன்றி,  பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தண்டு வட வாதத்தை காப்பீட்டுப் பட்டியலுக்குள் கொண்டு வராததால், சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், அதற்கான மருத்துவச் செலவை சமாளிப்பது மிகக் கடினம். இதற்கு அரசால் மட்டுமே தீர்வு காண முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து, மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி கூறியதாவது:
இந்தியாவில் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தண்டுவட வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற நோய்களைப் போல இதை எளிதில் கண்டறிய முடியாது. சாதாரணமான முதுகு வலியைப் போலத்தான் அதன் அறிகுறிகள் இருக்கும். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டால் நாளடைவில் தண்டு வடத்தை முடக்கி விடக் கூடிய அளவுக்கு தீவிரமடைந்து விடும்.
இதுதொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும். மற்றொருபுறம் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனுடன், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்நோய்க்கு நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு வழி வகை செய்ய வேண்டும். உலக தண்டு வட வாத விழிப்புணர்வு தினம் சனிக்கிழமை 
கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com