திருவொற்றியூரில் கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

சென்னை திருவொற்றியூரில் கடலில் விளையாடிக் கொண்டிருந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சென்னை திருவொற்றியூரில் கடலில் விளையாடிக் கொண்டிருந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
 திருவொற்றியூர், ஈசானிமூர்த்தி கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். மீன்பிடித் தொழிலாளி. இவரது மகன் சஞ்சய் (11) அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 6-ஆம் வகுப்புப் படித்து வந்தார். அதே பகுதியைச்சேர்ந்த வரதன் மகன் மதன் (12) அதே பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான இரு மாணவர்களும் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் அருகில் சனிக்கிழமை கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை மாணவர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
 அப்போது, வேறு யாரும் அங்கு இல்லாததால் மாணவர்கள் கடலில் மூழ்கிய சம்பவம் மற்றவர்களுக்கு உடனடியாகத் தெரியவில்லை. இதற்கிடையே இரவு வெகு நேரமாகியும் மாணவர்கள் இருவரும் வீட்டுக்குத் திரும்பாததால் அவர்களது பெற்றோர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவர்களைத் தேடி வந்தனர். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சிணாங்குப்பம் கடற்கரையில் சஞ்சய் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை பெற்றோர் அடையாளம் காட்டினர். இதையடுத்து மற்றொரு மாணவர் மதனின் நிலைமை குறித்து தெரியாமல் இருந்தது.
 ஞாயிற்றுக்கிழமை மதியம் அவரது உடலும் திருவொற்றியூர் குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. மாணவர்கள் இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 காசிமேடு முதல் தாழங்குப்பம் வரை கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களும் கொட்டப்பட்டுள்ளன. இதனால் கரையோரத்தில் உள்ளவர்கள் கடலில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
 எச்சரிக்கையையும் மீறி திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதியில் குளிப்பவர்கள் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. தற்போது 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே, மேலும் உயிர் பலியைத் தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com