குடிநீரை முறைகேடாக விற்பனை செய்தால் அனுமதி ரத்து: குடிநீர் வாரியம் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை, தனியாருக்கு விற்பனை செய்தால் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளுக்கான
குடிநீரை முறைகேடாக விற்பனை செய்தால் அனுமதி ரத்து: குடிநீர் வாரியம் எச்சரிக்கை


சென்னை: பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை, தனியாருக்கு விற்பனை செய்தால் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தில் 900 லாரிகள் ஒப்பந்த முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் மூலம் ஒரு நாளைக்கு 8 ஆயிரத்து 500 நடைகள் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்றன. இதில் 6 ஆயிரம் நடைகள் இலவசமாகவும், 2 ஆயிரத்து 500 நடைகள் வணிக ரீதியாகவும் விநியோகம் செய்யப்படுகின்றன. 
 குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில்  சென்னையில், வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் விற்பனையை வாரியம் நிறுத்தியுள்ளது. குடியிருப்புகளுக்கு மட்டுமே, குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  போதிய அழுத்தம் இல்லாததால், குழாய்கள் மூலமான குடிநீர் விநியோகத்தை நிறுத்திய வாரியம், தற்போது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தை அதிகரித்துள்ளது. 
அதேவேளையில் ஏதாவது ஒப்பந்த லாரிகள், வணிகர்களுக்கு குடிநீரை விற்பனை செய்து  முறைகேட்டில் ஈடுபட்டால்  உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  ஆனால் சில குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முறைகேடாக குடிநீரை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறியது:   அழுத்தம் குறைவான பகுதிகளில், இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைந்து லாரிகள் மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  
இந்த நிலையில், குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள், தினமும்  ஒரு இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்கு தனியார் டேங்கர் லாரிகளை வரவழைத்து குடிநீரை  ஊற்றி விட்டு கமிஷன் பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.
இதன் மூலம், தனியார் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு, டீசல் செலவும் மிச்சம், குடிநீரை சென்னைக்கு வெளியே சென்று, விவசாய கிணற்றில் இருந்து எடுத்து வர வேண்டிய நிலையும் இல்லை. இதனால், பல இடங்களில், மக்கள் தண்ணீர் கிடைக்காமல், குடங்களை எடுத்துக் கொண்டு, வீதி வீதியாக அலைந்து வருகின்றனர் என்றனர். 
ரூ. 17.50 லட்சம் அபராதம்: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,  ஜிபிஎஸ் கருவி மூலம் குடிநீர் வாரிய லாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தண்ணீர் விற்பனையைத் தடுக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பறக்கும் படை அதிகாரிகள் குழுவை குடிநீர் வாரியம் நியமித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் மக்களுக்காக இலவசமாக வழங்க வேண்டிய தண்ணீரை விற்பனை செய்த லாரிகள் கண்டறியப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களில் குடிநீர் விநியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 35 டேங்கர் லாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம்  ரூ.17.50 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களுக்கான  அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com