3 கோடி பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் ஆன்லைனில் பதிவேற்றம்: சுகாதாரத் துறை முடிவு

மாநிலம் முழுவதும்  கடந்த சில ஆண்டுகளாக பதிவான 3 கோடி பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை அரசின் இணையதளப் பக்கத்தில்

மாநிலம் முழுவதும்  கடந்த சில ஆண்டுகளாக பதிவான 3 கோடி பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை அரசின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அப்பணிகள் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் அந்தச் சான்றிதழ்களை கட்டணமின்றி ஆன்-லைன் மூலமாக எப்போது வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் வாயிலாக போலி சான்றிதழ்களைத் தடுக்க முடியும் எனவும், பிறப்பு - இறப்பு குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னை உள்ளிட்ட ஒரு சில மாநகராட்சிகளில் மட்டுமே கட்டணம் ஏதும் இல்லாமல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி இருந்தது.
அதேவேளையில், பிற இடங்களை எடுத்துக் கொண்டால், நேரில் சென்று அதற்காக கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிறப்பு - இறப்பு தகவல்களை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஓராண்டுக்கு முன்னர் அமலானது. இதற்காக ஜ்ஜ்ஜ்.ஸ்ரீழ்ள்ற்ய்.ர்ழ்ஞ் என்ற முகவரியில் பிரத்யேக இணையதளப் பக்கம் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அதன் கீழ், மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பதிவாகும் பிறப்பு - இறப்பு தகவல்கள் அனைத்தும் ஓராண்டாக பதிவேற்றம் செய்யப்பட்டன.
இருந்தபோதிலும், அந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் அந்தச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இந்தச் சூழலில்தான், சம்பந்தப்பட்ட நபர்கள், அந்தச் சான்றிதழ்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த மார்ச் 4-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து தற்போது வரை சுமார் 2 லட்சம் பேர் பிறப்புச் சான்றிதழ்களை தரவிறக்கம் செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் இறப்பு சான்றிதழ்களை ஆன்-லைன் வாயிலாகவே பெற்றுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் கூறுகின்றன.
போலி சான்றிதழ்களைத் தடுக்கும் விதமாக க்யூஆர் - கோடு' எனப்படும் பிரத்யேக குறியீடுடன் அந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முந்தைய பிறப்பு - இறப்பு தகவல்களையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் முதல்கட்டமாக, மின்னணு வடிவத்தில் (டிஜிட்டல் காப்பி) உள்ள சான்றிதழ்களை ஒருங்கிணைத்து அரசு இணையதளத்தில் பதிவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் துறை தகவல்படி 2.5 கோடிக்கும் மேற்பட்ட பிறப்பு சான்றிதழ்களையும், 60 லட்சத்துக்கும் அதிகமான இறப்பு சான்றிதழ்களையும் அவ்வாறு பதிவேற்ற உள்ளதாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்து வரும் ஆண்டுகளில் ஆவணப் பதிவேடுகளில் உள்ள மிகப் பழமையான சான்றிதழ்களையும் மின்னணு வடிவத்தில் மாற்றி ஆன்லைனில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறைகள் வந்த பிறகு பல்வேறு முறைகேடுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் கடந்த ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட பிறப்பு-இறப்புக்கான சான்றிதழ்கள் மட்டுமே இணையதளத்தில் உள்ளது. அதற்கு முந்தைய தரவுகள் அனைத்தும் அடுத்த சில மாதங்களுக்குள் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும்.
அதற்கான தொழில்நுட்பப் பணிகளும், மென்பொருள் மாற்றப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் 
பகுதிகளிலும்  பதிவாகியிருக்கும் பிறப்பு - இறப்பு விவரங்களையும், சான்றிதழ்களையும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com