தானியங்கி முறையில் சானிட்டரி நாப்கின் வழங்கும் வசதி

தானியங்கி முறை மூலம் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் வசதி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்காக ரூ.6.5 லட்சம் செலவில் நவீன சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தானியங்கி முறையில் சானிட்டரி நாப்கின் வழங்கும் வசதி

தானியங்கி முறை மூலம் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் வசதி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்காக ரூ.6.5 லட்சம் செலவில் நவீன சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.  மருத்துவமனையில் உள்ள பெண்கள் கழிப்பறைகளிலும், மகளிர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் பகுதிகளிலும் அவை பொருத்தப்பட்டுள்ளன.

சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை (மே 28) முதல் அந்த வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அரசு மருத்துவமனை ஒன்றில் சானிட்டரி நாப்கின்களை தானியங்கி முறையில் வழங்குவது மாநிலத்திலேயே இதுவே முதன்முறையாகும்.
ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகின்றனர். அதேபோன்று 300-க்கும் அதிகமான உள்நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அதைத் தவிர, மருத்துவமனை ஊழியர்கள், துணை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் உடன் இருப்பவர்கள், முழு உடல் பரிசோதனை மேற்கொள்பவர்கள் என ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் மருத்துவமனைக்கு வருகின்றனர்.  அவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பெண்களாவர்.
தனி மருத்துவ சேவைகள், கழிப்பறைகள், சிறப்பு வார்டுகள் என பெண்களுக்காக பல்வேறு பிரத்யேக வசதிகள் மருத்துவமனைக்குள் செய்யப்பட்டிருந்தாலும், மாதவிடாய் காலங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை விஷயமான சானிட்டரி நாப்கின்கள் அங்கு கிடைக்காமல் இருந்து வந்தது.
அவற்றை வாங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை நீடித்தது. இந்த நிலையில், அப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக மருத்துவமனைக்குள் தானியங்கி முறையில் சானிட்டரி நாப்கின்களை வழங்கும் சாதனங்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதேபோன்று உபயோகப்படுத்தப்பட்ட நாப்கின்களை முறையாக எரித்து அப்புறப்படுத்தும் சாதனங்களையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ. 6.5 லட்சம் செலவில் 8 நாப்கின் வழங்கும் சாதனங்களும், 12 நாப்கின் அப்புறப்படுத்தும் சாதனங்களும் வாங்கி பொருத்தப்பட்டுள்ளன. மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமா நாத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் கூறியதாவது:
மாதவிடாய் காலங்களில் சுகாதாரம் பேணுவது மிக அவசியம். அதுகுறித்த முறையான விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை. அதை ஏற்படுத்தும் பொருட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் வரும் 28-ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.
பொதுவாக, பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் பிளாஸ்டிக் இழைகள்தான் உள்ளன. அவற்றை முறையாக அப்புறப்படுத்தாவிடில் பல நூறு ஆண்டுகள் வரை அவை மக்காமல் இருக்கும் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பருத்தியால் தயாரிக்கப்பட்ட எளிதில் மக்கும் தன்மை கொண்ட நாப்கின்களை பயன்படுத்துமாறும், அவற்றை உபயோகப்படுத்திய பிறகு எரிக்கும் சாதனங்கள் மூலமாக அப்புறப்படுத்துமாறும் அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்த உள்ளோம். மாதவிடாய் என்பது அருவறுக்கத்தக்கக் கூடிய ஒன்றோ, வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்றோ அல்ல. பெண்கள் தங்களது வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளக் கூடிய மிகச் சாதாரண விஷயம்தான். இந்தப் புரிதல் பல பெண்களுக்கு இல்லை. அதனை ஏற்படுத்தும் முயற்சியாகவே மருத்துவமனைக்குள் தானியங்கி சானிட்டரி நாப்கின் சாதனங்களைப் பொருத்துகிறோம்.
அதன் மூலம் பெண் நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள், பெண் ஊழியர்கள், செவிலியர்கள், மாணவிகள் என பலர் பயனடைவர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com