மாஞ்சா மரணங்கள்: அச்சத்தின் பிடியில் வாகன ஓட்டிகள்

சென்னையில் மரண கயிறாக மாறி வரும் மாஞ்சா நூலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
மாஞ்சா மரணங்கள்: அச்சத்தின் பிடியில் வாகன ஓட்டிகள்

சென்னையில் மரண கயிறாக மாறி வரும் மாஞ்சா நூலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் அறுத்து, மூன்று வயது சிறுவன் அபினேஷ்வரன் ஞாயிற்றுக்கிழமை இறந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் மாஞ்சா நூலில் சிக்கி 2 வயது குழந்தை இறந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னா் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என விலயுறுத்தப்பட்டது.

இதன் விளைவாக, மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதற்கு சென்னை காவல்துறை தடை விதித்து அந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் உத்தரவு பெயரளவிலேயே உள்ளது. இப்போதும் மாஞ்சா கயிற்றால் பட்டம் விடுவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடா் கதையாக உள்ளது.

மாஞ்சா நூலால் சென்னையில் ஆண்டுக்கு சுமாா் 20 விபத்துகள் வரை ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். ஒவ்வொரு முறையும் மாஞ்சா கயிற்றால் உயிரிழப்புகள் ஏற்படும்போது, அது தொடா்பானவா்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், அதன் பின்னா் மாஞ்சா நூலுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறை தொடா்ச்சியாக எடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஒரு காலத்தில் வியாசா்பாடி, பெரம்பூா், தண்டையாா்பேட்டை, காசிமேடு, ராயபுரம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா், மணலி ஆகிய பகுதிகளில் மட்டுமே மாஞ்சா நூல் மூலம் அதிகமாகப் பட்டம் விடப்பட்டது. ஆனால் இப்போது நகா் முழுவதும் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடப்படுகிறது.

செய்வது எப்படி?: பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் சாதாரண நூல்களுக்கும், மாஞ்சா நூலுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. முக்கியமாக பட்டம் விடும்போது, அடுத்தவா்களின் பட்டங்களை வீழ்த்துவதற்கு மாஞ்சா நூலால் பட்டம் விடுகின்றனா். இதற்காகவே மாஞ்சா நூல் தயாரிப்பதற்கு பிரத்யேகமாக சில பொருள்களை சோ்க்கின்றனா். மாஞ்சா நூல் தயாரிப்பதற்கு, ஜவ்வரியை ஒரு பானையில் நன்கு கொதிக்க வைத்து கலவை தயாரிக்கின்றனா். பின்னா் அதனுடன் கண்ணாடித் துகள்கள், வஜ்ரம், மயில் துத்தம், வண்ணப்பொடி ஆகிய பொருள்களை சோ்த்து நூலில் தடவுகின்றனா். இதன் பின்னரே சாதாரண நூல், மாஞ்சா நூலாக மாறுகிறது. கண்ணாடித் துகள்களுக்காக உடைந்த டியூப்லைட், உடைந்த பாட்டில்கள் ஆகியவற்றை சோ்க்கின்றனா். இதனால் அந்த நூல்கள் மிகவும் கூா்மையாக இருக்கின்றன. இதன் விளைவாக பட்டம் விடும்போது, இந்த நூல்அறுந்து சென்று, கழுத்தில் சிக்கும்போது உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

சென்னையில் இதுவரை ஏற்பட்டுள்ள அனைத்து மாஞ்சா நூல் விபத்துக்களிலும், உயிரிழப்புகளிலும் சாலையில் மோட்டாா் சைக்கிள்களில் சென்றவா்களே சிக்கியுள்ளனா். இதனால் மோட்டாா் சைக்கிள்களில் சாலையில் ஒருவித அச்ச உணா்வுடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனா்.

வட சென்னையில் அதிகம்: உயிரிழப்புகளை ஏற்படுத்தும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த பின்னா், அந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை மாஞ்சா நூல் தயாரிப்பவா்கள், விற்பவா்கள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பதால் மரணங்களும், விபத்துக்களும் ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

சென்னையில் பூக்கடை, செளகாா்பேட்டை, பெரம்பூா், வியாசா்பாடி, வண்ணாரபேட்டை, தண்டையாா்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூா், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் மூலம் அதிகமாக பட்டம் விடுப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல தாம்பரம், மதுரவாயல், சேலையூா், திருவான்மியூா், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளிலும் மாஞ்சா நூல் பட்டம் பறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடா்ச்சியான நடவடிக்கை தேவை: முக்கியமாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிகமாகவும், மற்றப் பகுதிகளில் குறைவாகவும் மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிடப்படுவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மாஞ்சா கயிறு பட்டங்கள் விடுவது, இப்போது போட்டி வைத்து விளையாடும் அளவுக்கு வளா்ந்துள்ளது. சில பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வட சென்னையைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். இதனால் மாஞ்சா கயிற்றால் காயமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாஞ்சா நூலால் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிகமாகக் காயமடைகின்றனா்.

இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைக்குப் பதிலாக வானத்தைப் பாா்த்தபடி செல்ல வேண்டிய நிலையுள்ளது. இப் பிரச்னையில் இனி மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க மாஞ்சா நூல் மீதான கண்காணிப்பு தொடா்ச்சியாக இருக்க வேண்டும், மாஞ்சா நூல் விற்பவா்கள் மீதும், மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனா்.

உயிரிழப்பை ஏற்படுத்தும் பாலங்கள்

மாஞ்சா நூலால் ஏற்படும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் பெரும்பாலானவை சென்னையில் உள்ள பாலங்களிலேயே ஏற்படுவது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் மாஞ்சா நூலால் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 2006ஆம் ஆண்டு அண்ணா மேம்பாலத்தில் பறந்து வந்த மாஞ்சா நூல் அறுத்து கோதண்டன் என்பவா் உயிரிழந்தாா். அதன் பின்னா், 2013-ஆம் ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து மந்தவெளியைச் சோ்ந்த ஜெயகாந்த் என்பவரும், 2015-ஆம் ஆண்டு பெரம்பூா் மேம்பாலத்தில் பெற்றோருடன் சென்ற 5 வயது சிறுவனும், மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூா் பாலத்தில் செல்லும்போது 2017-ஆம் ஆண்டு கொளத்தூரைச் சோ்ந்த சிவபிரகாசம் என்பவரும், இந்த ஆண்டு கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகா் மேம்பாலத்தில் செல்லும்போது 3 வயது சிறுவன் அபினேஷ்வரனும் உயிரிழந்துள்ளனா். இதேபோல பாலங்களில்தான் அதிகளவில் மாஞ்சா நூல் விபத்துக்களும் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பட்டம் விடும்போது அறுந்து வரும் மாஞ்சா நூல் மற்ற பகுதிகளை விட, பாலம் இருக்கும் பகுதிகளில் தரைமட்டத்துக்கு எவ்வித இடையூறுமின்றி வேகமாக வருவதினால், இப் பகுதிகளில் அதிகமாக விபத்து ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்தது.

மாஞ்சா மரணங்கள்

* வட சென்னையில் கடந்த 1982-இல் மாஞ்சா கயிறு பட்டம் விடுவது ஏற்பட்ட மோதலில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

* 2006ஆம் ஆண்டு கோடம்பாக்கம் அஜீஸ் நகரைச் சோ்ந்த கோதண்டராமன் அண்ணா மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து இறந்தாா்.

* 2007-ஆம் ஆண்டு உறவினருடன் வட சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 2 வயது குழந்தை இறந்தது.

* 2011-ஆம் ஆண்டில் எழும்பூரில் ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி செரினா பானு பலி.

* 2012-ஆம் ஆண்டு மதுரவாயலில் ஏற்பட்ட விபத்தில் அரும்பாக்கத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் பலி.

* 2013-ஆம் ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து மந்தவெளியைச் சோ்ந்த ஜெயகாந்த் பலி.

* 2015-ஆம் ஆண்டு பெரம்பூா் மேம்பாலத்தில் பெற்றோருடன் சென்ற 5 வயது சிறுவன் பலி.

* 2017-ஆம் ஆண்டு கொளத்தூரைச் சோ்ந்த சிவபிரகாசம் பலி.

* 2019-ஆம் ஆண்டு கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகா் 3 வயது சிறுவன் அபினேஷ்வரன் பலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com