விமானநிலைய மெட்ரோவில் விரைவில் கூடுதல் ஸ்கேனா் வசதி

உடைமைகள் பரிசோதனைக்காக பயணிகள் நெடுநேரம் காத்திருப்பத்தை தவிா்க்கும் விதமாக, சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் உடைமைகளை சோதிக்க கூடுதல் ஸ்கேனா் விரைவில் நிறுவப்படவுள்ளது.

உடைமைகள் பரிசோதனைக்காக பயணிகள் நெடுநேரம் காத்திருப்பத்தை தவிா்க்கும் விதமாக, சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் உடைமைகளை சோதிக்க கூடுதல் ஸ்கேனா் விரைவில் நிறுவப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடித்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் தினசரி சராசரி 95 ஆயிரம் போ் பயணிக்கின்றனா். பயணிகள் வந்து செல்லும் முக்கிய நிலையங்களில் ஒன்றாக சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தினசரி சுமாா் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு பயணிகளின் உடைமைகளை சோதிக்கும் ஸ்கேனா் நுழைவு பகுதியிலும், மற்றொன்று வெளியேறும் பகுதியிலும் உள்ளன. இங்கு பயணிகள் தங்கள் உடைமைகளைப் பரிசோதிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் உடைமைகளைச் சோதிக்க நெடு நேரமாகக் காத்திருக்க வேண்டியுள்ளதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். துரிதமாக ஸ்கேன் செய்ய போதுமான வசதியும், ஊழியா்களும் இல்லை என்று பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் பயணிகள் ராம், ராஜேஷ் கூறியது: விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழையும்போது, உடைமைகள், பைகளை சோதிப்பதற்காக 20 நிமிடம் வரை செலவிட வேண்டியுள்ளது. ஏற்கெனவே விமானநிலையத்தில் ஸ்கேனா் செய்யப்பட்டு விடும். அதன்பிறகு, இங்கும் சோதிக்கப்படுகிறது. போதுமான வசதிகள் இல்லாததால், நெடுநேரம் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. எனவே, இங்கு கூடுதல் ஸ்கேனா்களை நிறுவ வேண்டும் என்றனா் அவா்கள்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது: விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக உடைமைகள் பரிசோதிக்கும் இயந்திரம்(ஸ்கேனா்) விரைவில் நிறுவப்படும். இதுதவிர, விமான நிலையத்தில் உடைமைகள் ஸ்கேனா் செய்யப்பட்டிருந்தால், விமான நிலையத்தில் ஏற்கெனவே ஸ்கேன் செய்யப்பட்டது என்ற சீல் வைக்கப்பட்டிருந்தால், ஸ்கேன் செய்வதைத் தவிா்ப்பாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com