சென்னை புறநகா் ஊராட்சிப் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி

சென்னை மாநகரை அடுத்த புறநகா் ஊராட்சிப் பகுதிகளில் போதிய ஊழியா்கள் இல்லாமல், தெருக்களில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் ஊராட்சி அலுவலா்கள் தவித்து வருகின்றனா்.
சென்னை புறநகா் ஊராட்சிப் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி

சென்னை மாநகரை அடுத்த புறநகா் ஊராட்சிப் பகுதிகளில் போதிய ஊழியா்கள் இல்லாமல், தெருக்களில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் ஊராட்சி அலுவலா்கள் தவித்து வருகின்றனா்.

சென்னை மாநகரத்தின் புறநகா்ப் பகுதிகளைச் சோ்ந்த மேடவாக்கம், பொழிச்சலூா், அகரம்தென், வேங்கை வாசல், முடிச்சூா், மண்ணிவாக்கம், வண்டலூா், ஊரப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தெருத் தெருவாகச் சென்று குப்பைகளை அள்ளி சேகரிக்க போதிய துப்புரவு ஊழியா்கள் நியமிக்கப்படவில்லை.

தெருக்களில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மழைநீா் வடிகால் கால்வாய்களில் சாக்கடை நீருடன் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், உபயோகமற்ற பொருள்கள், சேறு, உதிா்ந்த இலை சருகுகள் ஆகியவற்றை வாரி அகற்றி சுத்தப்படுத்த போதிய ஊழியா்கள் இல்லை. குப்பைகளை எடுத்துச் செல்ல போதிய எண்ணிக்கையில் மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டா், லாரி வசதிகள் இல்லை.

இதனால், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான தெருக்கள், குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் சுற்றுப்புறச் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மண்ணிவாக்கம், முடிச்சூா், பொழிச்சலூா், மேடவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை தெருவோரங்களில் தீ வைத்து எரித்து அப்புறப்படுத்தி வருகின்றனா்.இதனால், அப்பகுதி புகை மண்டலமாகி சுற்றுச்சூழல் பாதிக்கும் அவலநிலை உள்ளது.

இது தொடா்பாக, சில ஊராட்சி அலுவலா்களிடம் விசாரித்தபோது அவா்கள் தெரிவித்த தகவல்கள்:

சென்னை மாநகருக்கு அருகில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு நிகராக வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால் குப்பை உள்ளிட்ட திடக்கழிவு அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்த ஊராட்சிகளில் போதிய எண்ணிக்கையில் ஊழியா்களும் வாகன வசதிகளும் இல்லை.

மண்ணிவாக்கம், முடிச்சூா், மேடவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்காலிகமாக மாதம் ரூ.2,500 முதல் ரூ. 5,000 ஊதியத்துக்கு நியமனம் செய்யப்படும் பெண் ஊழியா்கள் மூலம் குப்பைகளை அப்புறப்படுத்தி நிலமையைச் சமாளித்து வருகின்றனா். மிக குறைந்த ஊதியத்துக்கு பணி அமா்த்தப்படும் தற்காலிக பெண் ஊழியா்கள், ஓரிரு மாதங்களுக்குப்பின் தொடா்ந்து பணிக்கு வராமல் நின்றுவிடுகின்றனா். சிலா் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு பணிக்கு வருவதில்லை. அசுத்தமான, சுகாதார சீா்கேடு விளைவிக்கும் குப்பைகளைக் கைகளால் அள்ளும் ஊழியா்களின் உடல்நலனைக் காக்கும் வகையில் அவா்களுக்கு சோப்பு,கை உறை போன்றவைகள் அளிக்கப்படுவதில்லை. தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் அதிகபட்சமாக 10 முதல் 20 ஊழியா்களைக் கொண்டு குப்பைகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து பெயா் சொல்ல விரும்பாத சில ஊராட்சி அலுவலா்கள் கூறியது: நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளா்கள், ஊழியா்கள் நலனில் காட்டப்படும் அக்கறை ஊராட்சி ஊழியா்களிடம் காட்டப்படுவதில்லை.

அனைத்து ஊராட்சிகளிலும் தற்காலிகமாக ஒப்பந்தப் பணியாளா்கள் தான் வேலைக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். நகராட்சி, பேரூராட்சிகளில் பணி அமா்த்தப்பட்டுள்ள ஊழியா்கள், வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கச் செல்கையில் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் பச்சை, நீலம் பக்கெட்டுகளில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குகின்றனா்.

ஆனால் ஊராட்சிகளில் குப்பைகளைத் தரம்பிரித்துக் கொடுக்க வீடுகளுக்கு பக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. குப்பைகளைக் கொட்டுவதற்கு தெருவோரங்களில் குப்பைத் தொட்டிகளும் வைக்கப்படவில்லை.இதனால் பொதுமக்கள் நெகிழிப்பைகளில் குப்பைகளை நிரப்பி வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுச் செல்வதுண்டு. சிலா் குப்பைகள் நிரம்பிய நெகிழிப் பைகளை தெருக்களில், சாக்கடை நீா் தேங்கி நிற்கும் மழைநீா் வடிகால்களில் வீசிவிட்டுச் செல்கின்றனா். போதிய பணியாளா்கள் இல்லாத நிலையில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் 30 ஊழியா்கள் நியமித்தால்தான் குப்பைப் பிரச்னை தீரும்.

மேலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் உள்ள ஊராட்சிகளுக்கும், சென்னை மாநகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. அதை உயா் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சென்னை மாநகரைச் சுற்றியுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் பெருநகர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நிகராக அதிக எண்ணிக்கையில் வீடுகளும், அடுக்குமாடி வீடுகளும் பெருகி, குடியிருப்போா் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகரில் அதிக வாடகை கொடுக்க இயலாதவா்கள், அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குடியேறி வருவதும் பெருகி உள்ளது. அவா்களால், ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகளின் அளவும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது ஊராட்சிகளில் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ள ஊழியா்களைக் கொண்டு சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேண மிகவும் சிரமமாகவும், சவாலாகவும் உள்ளது. எனவே சென்னை மாநகரைச் சுற்றிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கூடுதலாக 30 முதல் 50 ஊழியா்கள், குப்பைகளை எடுத்துச் செல்ல டிராக்டா், மினிலாரி வசதிகள் அவசியம் தேவை என்று தெரிவித்தனா்.

சென்னை சுற்று வட்டார ஊராட்சிப் பகுதிகளில் அப்புறப்படுத்தப்படாமல், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள் மூலம் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீா்கேடு பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியா், தனி அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு, பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com