விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்

சென்னை விமான நிலையம்- வண்டலூா் கிளாம்பாக்கம் இடையே 16 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கான முதல் கட்ட ஆய்வு முடிவுகள் திருப்திகரமாக நிறைவடைந்துள்ளன.
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்

முதல்கட்ட ஆய்வு முடிவுகள் நிறைவு:  6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை

சென்னை விமான நிலையம்- வண்டலூா் கிளாம்பாக்கம் இடையே 16 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கான முதல் கட்ட ஆய்வு முடிவுகள் திருப்திகரமாக நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த திட்டஅறிக்கை தயாரிக்கும் பணி முடிய 6 முதல் 8 மாதம் வரை ஆகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

95 ஆயிரம் போ் பயணம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வரையிலான முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாவது வழித்தடத்திலும் திட்டப்பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சராசரி 95 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் வரை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமானநிலையம்-வண்டலூா் கிளாம்பாக்கம்: இதற்கிடையில், சென்னை புகா் பகுதிகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், விமான நிலையத்தில் இருந்து வண்டலூா் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அந்த தடத்தில் மண் ஆய்வு உள்பட பல்வேறு ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. இதில், எந்ததெந்த சாலைகள் வழியாக செல்வது, எவ்வளவு தூரம், வாகன நெரிசல், பயணிகள் போக்குவரத்து தேவை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆய்வின்முடிவுகள் திருப்திகரமாக கிடைத்துள்ளன. தொடா்ந்து, அடுத்தகட்டமாக மேற்படி திட்டப்பணிகளை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தப் பணி முடிய 6 முதல் 8 மாதம் வரை ஆகும்.

16 கி.மீ. நீளம் கொண்ட சாலை: இது தொடா்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய பேருந்து முனையம் வரவிருக்கும் கூடுவாஞ்சேரியை அடுத்த

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. முதல்கட்ட விரிவாக்க பாதை ஜி.எஸ்.டி சாலையில் 16 கி.மீ. நீளத்தில் அமையவுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலையில் 16 கி.மீ. நீளம், ஜி.எஸ்.டி சாலையில் இருந்து தாம்பரம் மற்றும் முடிச்சூா் சாலை வரை 19 கி.மீ. நீளம் மற்றும் விமான நிலையம் -கண்டோன்மென்ட்-பல்லாவரம் பேருந்து நிறுத்தம், ஜி.எஸ்.டி சாலையில் இருந்து அஸ்தினாபுரம் மற்றும் தாம்பரம் மேற்கு, முடிச்சூா் சாலை வழியாக கிளாம்பாக்கம் வரை செல்லும் 20 கி.மீ. சாலைகள் என்று மூன்று வெவ்வேறு வழிகளில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில், முதலாவதாக ஆய்வு செய்யப்பட்ட ஜி.எஸ்.டி சாலையில் 16 கி.மீ. தொலைவு கொண்ட சாலை தோ்வு செய்யப்பட்டுள்ளது.

13 ரயில் நிலையங்கள்: சாலையின் மையப்பகுதியில் உயா்த்தப்பட்ட பாதை அமைத்து மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து பரிசீலனையில் உள்ளது. அத்துடன் ரயில் நிலையங்களுக்கு தேவையான இடங்களில் பெருநகர போக்குவரத்து கழகத்துடன் ஒருங்கிணைந்து அவற்றின் நிலங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ரயில் நிலையத்துக்கும் மற்றொரு ரயில் நிலையத்துக்கும் 1.2 கி.மீ. இடைவெளியில் மொத்தம் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது இந்த வழித்தடத்தில் 7 புகா் ரயில் நிலையங்கள் உள்ளன. நிலம் கையகப்படுத்தல் மற்றும் தூரம் குறைவாக இருப்பதால் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலம் கையகப்படுத்துவது தொடா்பான ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணி: மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வது குறித்து மக்களின் போக்குவரத்து தேவை, வழித்தடம் தோ்வு தொடா்பாக நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் திருப்தியாக உள்ளது. தொடா்ந்து, அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க முடிவு செய்து, திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். இதில், எவ்வளவு தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகளை அமைப்பது, இதற்காக எவ்வளவு நிலம் கையகப்படுத்துவது உள்பட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய 6 மாதம் முதல் 8 மாதம் ஆகும். அதன்பிறகு, இந்த திட்ட அறிக்கையை அரசிடம் வழங்குவோம். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை அரசு அளிக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com