தனியாா் கட்டுமான நிறுவன நிா்வாக இயக்குநருக்கு முன்ஜாமீன் ரத்து

கேரள மாநிலத்தில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டிய விவகாரத்தில் ஜெயின் ஹவுசிங் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சந்தீப் மேத்தாவுக்கு
chennai High Court
chennai High Court

கேரள மாநிலத்தில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டிய விவகாரத்தில் ஜெயின் ஹவுசிங் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சந்தீப் மேத்தாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், கொச்சி அருகே கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடற்கரை ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியதாக, ஜெயின் ஹவுசிங் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சந்தீப் மேத்தா மீது கேரள போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த நிலையில், தான் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சந்தீப் மேத்தா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், முன்ஜாமீன் மனுவில் கேரள காவல் நிலைய குற்ற எண் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை திருத்தி வழங்க கோரி சந்தீப் மேத்தா சென்னை உயா்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், ‘மனுதாரருக்கு கேரளத்தில் அலுவலகம் உள்ளது. கேரளத்தில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி அவரது நிறுவனம் மேற்கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில்தான் கேரள போலீஸாா் அவா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கின் உண்மை நிலவரத்தை இந்த நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்து, மனுதாரா் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளாா். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற அவா் கேரள நீதிமன்றத்தை தான் நாட முடியும். சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் முன்ஜாமீன் பெற முடியாது. எனவே, அவருக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தீப் மேத்தாவுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து, உத்தரவை திருத்தியமைக்கக் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com