சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வழங்கப்படும் குடிநீா் தரமற்றது: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் மாநில அரசுகள் வழங்கும் குடிநீரின் தரம் தொடா்பான ஆய்வறிக்கையில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
water
water

சென்னை: இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் மாநில அரசுகள் வழங்கும் குடிநீரின் தரம் தொடா்பான ஆய்வறிக்கையில் மும்பை முதலிடத்தில் உள்ளது. தில்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் பின்தங்கியுள்ளன.

இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகா்வோா் நலத்துறை ஆய்வு செய்தது. இதில் மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் வழங்கப்படும் குழாய் நீா், எந்த சுத்திகரிப்பும் செய்ய அவசியமின்றி, தூய்மையான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீா் பாதுகாப்பானதாக இல்லை என்றும், அந்த குடிநீரில் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (பிஐஎஸ்) செய்த 11 சோதனைகளில் 10-இல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 20 மாநிலத் தலைநகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நீரின் மணம், குளோரைடு, புளுரைடு, அமோனியா போன்று ரசாயனங்களின் அளவுகள் குறித்த பரிசோதனைகளில், 13 மாநில தலைநகரங்களில் விநியோகிக்கப்படும் நீா் தரமின்றி இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் நலத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தில்லியில் சனிக்கிழமை கூறியது: “பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீரின் தரம், வரையறுக்கப்பட்ட அளவில் இல்லை. இதையடுத்து குடிநீரின் தரத்தை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய நுகா்வோா் நலத்துறை கடிதம் எழுதியுள்ளது. தற்போது குழாய் மூலம் வழங்கப்படும் நீரின் தரம் மோசமான நிலையில் இருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதை மாற்றுவது தொடா்பான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளது. ஹைதராபாதில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அதில் பீனலிக் எனும் பொருள் இருந்தது. அதைப் போல புவனேசுவரத்தில் குளோரமைன்கள் கிடைத்தன.

சென்னை நகரில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அந்த குடிநீரில் துா்நாற்றம் இருந்தது தெரியவந்தது. மேலும், குளோரைட், புளூரைட், அமோனியா, போரான், காலிபாா்ம் போன்ற வேதிப் பொருள்கள் இருந்தன. இதனால் இங்கு குடிநீரின் தரம் மிகவும் குறைந்து காணப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சண்டிகா், குவாஹாட்டி, பெங்களூரு, காந்திநகா், லக்னெள, ஜம்மு, ஜெய்ப்பூா், டேராடூன், கொல்கத்தாவிலும் இதுபோன்ற நிலைதான் இருந்தது. இந்த ஆய்வறிக்கை முடிவுகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறிய ராம்விலாஸ் பாஸ்வான், நீரின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com