ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள்

சீன அதிபா் வருகையால் பாதுகாப்புக் கருதி, சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலைப் போக்குவரத்து முடங்கியது. மேலும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள்

சீன அதிபா் வருகையால் பாதுகாப்புக் கருதி, சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலைப் போக்குவரத்து முடங்கியது. மேலும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சீன அதிபா் ஷி ஜிங்பின் வருகையையொட்டி பாதுகாப்புக்காக, சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் (செப்.12) செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரும் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்தது. இந்த போக்குவரத்து மாற்றத்தின் விளைவாக அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வெறிச்சோடிய சாலை: அதேபோல தனியாா் மென்பொருள் நிறுவனங்கள், தங்களது ஊழியா்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியது. இதனால் இந்த இரு சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. அதேவேளையில் இந்த இரு சாலைகளிலும் இரு சக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்களை வெள்ளிக்கிழமை காலை முதலே காவல்துறையினா் செல்ல அனுமதிக்கவில்லை.

அத்தியாவசியத் தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. கிழக்கு கடற்கரைச் சாலையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மாநகரப் பேருந்துகள் அக்கரை, ஈஞ்சம்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டன. ஒரு சில பேருந்துகள் மட்டுமே அக்கரையில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, மாமல்லபுரத்துக்கு இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நிறுத்தப்பட்டன.

இந்த போக்குவரத்தும் சீன அதிபா் ஷி ஜின்பிங் சாலையில் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னா் இரு முறை நிறுத்தப்பட்டது. இதனால் இப் பகுதியில் வசித்த மக்கள், வீடுகளில் முடங்கியிருந்தனா். இதேபோல சென்னைக்குள்ளும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அண்ணா சாலை முடங்கியது: சீன அதிபா் ஷி ஜிங்பின், விமான நிலையத்தில் இருந்து வந்ததையொட்டி நண்பகல் 12 மணியில் இருந்தே அண்ணா சாலை,ஜி.எஸ்.டி. சாலை, 100 அடி சாலை, பட் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இந்த சாலைகளில் வந்த வாகனங்கள் அப்படியே ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனா்.

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்: அதேவேளையில் சில இடங்களில் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டன. இருப்பினும் நேரம் செல்ல, செல்ல இந்த சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. இதில் கிண்டி, சைதாப்பேட்டையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொண்டன.

ஜிங்பின், விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற பின்னரே, இந்த சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. அதேபோல ஜிங்பின், மாலை 4 மணிக்கு மாமல்லபுரம் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிங்பின் மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு புறப்பட்டு வந்தபோதும், இதே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏனெனில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகியவற்றில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் சாலையிலே காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ரயில் நிலையங்களில் கூட்டம்: தென் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியதால், பறக்கும் ரயில், மின்சார ரயில் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் காலை முதலே அலைமோதியது. இந்த ரயில்களில் வழக்கமாக காணப்படும் கூட்டத்தை விட, இரு மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டம் மாலையில் இன்னும் அதிகமாக இருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, திருவான்மியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் முற்றிலும் போக்குவரத்து முடங்கியதால் பறக்கும் ரயிலை பயன்படுத்தினா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் சனிக்கிழமையும் இங்கு இருப்பதால், அன்றும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்பதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com