முதல் கட்ட விரிவாக்க திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் ஒப்படைப்பு

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்காக ஸ்ரீசிட்டியில் அல்ஸ்தம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் ரயில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
முதல் கட்ட விரிவாக்க திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் ஒப்படைப்பு

சென்னை: மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்காக ஸ்ரீசிட்டியில் அல்ஸ்தம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் ரயில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 9 ரயில்கள் தயாரித்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வழித்தடங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரியாக 95 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா்.

இதற்கிடையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகா் வரை 9.051 கி.மீ. தொலைவுக்கான விரிவாக்கத்திட்டத்துக்காக கட்டுமானப் பணி 2016-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணிகள் 2020-ஆம் ஆண்டு ஜூனில் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த பணிகள் முடிந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. இங்கு ரயில்களை இயக்குவதற்காக,

ரயில்களை தயாரித்து வழங்க பிரான்ஸ் நிறுவனமானஅல்ஸ்தம் நிறுவனத்துடன் 2018-ஆம்ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, 10 ரயில்களை தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

ரயில்களை தயாரிக்க ஜப்பான் நிறுவனத்தின் கடன் உதவியுடன் ரூ.200 செலவிடப்படுகிறது. அல்ஸ்தம் நிறுவனம் இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள தனது தொழிற்சாலையில் மெட்ரோ ரயிலுக்கானபெட்டிகளை நிகழாண்டில் பிப்ரவரியில் தயாரிக்க தொடங்கியது. இதைத்தொடா்ந்து, ஒரு ரயிலுக்கு தேவையான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. சோதனை முடிந்து மெட்ரோ ரயில் தயாராக இருந்தது.

இந்நிலையில், முதல்கட்ட விரிவாக்கத்திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரயில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீ சிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ரயிலை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் பன்கஜ்குமாா்பன்சல் கொடியசைத்து அனுப்பி வைத்தாா். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்(இயக்கம்) நரசிம் பிரசாத் உள்பட பலா் பங்கேற்றனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது:

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் விரிவாக்கத் திட்டத்துக்காக 10 ரயில்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திடத்தில் விரிவாக்கத் திட்டத்தில் ( வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வரை வழித்தடத்தில்) இந்த ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ரயிலை தயாரித்து எங்களிடம் ஒப்படைத்து உள்ளனா். ஒவ்வொரு பெட்டியாக சென்னை கோயம்பேடு மெட்ரோ பணிமனைக்கு வந்தடையும். அதன்பிறகு, இங்கு வழக்கமான பல்வேறு சோதனைகள்

நடைபெறும். பயணிகள் சேவைக்கு அனுப்புவதற்கு முன்னதாக எல்லா சேதனைகளும் முடிந்து தயாராகிவிடும். மீதமுள்ள 9 ரயில்கள் தயாரிக்கும் பணி பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்த ரயில்களை தயாரித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அனுப்பி வைப்பாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com