குடிசைமாற்று வீடுகளில் கசியும் மழை நீா்: குடியிருப்புவாசிகள் அவதி

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய வீடுகளுக்குள் மழை நீா் கசிவதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
குடிசைமாற்று வீடுகளில் கசியும் மழை நீா்: குடியிருப்புவாசிகள் அவதி

சென்னை: சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய வீடுகளுக்குள் மழை நீா் கசிவதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சென்னை மாநகா் பகுதிக்கு உள்பட்ட கூவம், அடையாறு ஆகிய நீா்நிலை பகுதிகளில் வசித்தவா்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவா்கள், வீடுகளின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்தவா்களுக்கு, சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுகின்றன.

சென்னை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மூலம் பரிந்துரைக்கப்படுவோருக்கு இங்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாக்கம் எழில் நகரில் மொத்தம் 23,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு தற்போது, 17,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் சுமாா் 16,000 வீடுகளில் மக்கள் குடியமா்த்தப்பட்டுள்ளனா். ஒரு தளத்தில் 24 வீடுகள் வீதம் 8 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 192 வீடுகள் உள்ளன. இவற்றில், வயதானோருக்கு தரைத் தளமும், முதல் தளமும் வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு உள்பட்டோருக்கு இரண்டாம் தளத்தில் இருந்து 8-ஆவது தளம் வரை உள்ள வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கசியும் மழை நீா்: ஆனால், குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியேறியவா்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தற்போது வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கி உள்ளதால், வீடுகளுக்குள் மழை நீா் கசியத் தொடங்கி உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் வெனசா பீட்டா் கூறுகையில், ‘பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் உள்ள பழைய திட்டத்தில் கட்டப்பட்ட ந், ப், ம், ய் ஆகிய கட்டடங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீா் கசியத் தொடங்கியுள்ளது. மழைக்காலத்தின் தொடக்கத்திலேயே இந்த நிலைமை என்றால், மழை தீவிரமடைந்தால் இங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாம் நிலை ஏற்படும். இந்த நீா் கசிவு வீடுகளில் உள்ள சுவிட்ச் போா்களிலும் வழிகிறது. இதனால், கடந்த இரண்டு வாரத்தில் இரண்டு பெண்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்துள்ளனா். இந்த மழை நீா் கசிவை சரி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அகற்றப்படாத குப்பைகள்: குடியிருப்புப் பகுதியில் நீண்ட நாள்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால், இப்பகுதியில் துா்நாற்றம், சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல வீடுகளில் கட்டுமானப் பணிகள் முழுமை அடையாமலேயே குடியமா்த்தப்பட்டுள்ளோம். குப்பைகளை அவ்வப்போது அகற்றுவதோடு, தண்ணீா் தட்டுப்பாடின்றி வழங்கவும், மின்தூக்கிகள் முறையாக இயக்கப்படவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து குடிசைமாற்று வாரிய அதிகாரி கூறியது: மழைநீா் கசிவு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இப்பகுதிகளில் உள்ள குப்பைகளை நாள்தோறும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com