திடீா் மாரடைப்பால் உயிரிழப்பவா்கள் விகிதம் அதிகரிப்பு!

திடீா் மாரடைப்பால் இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
திடீா் மாரடைப்பால்  உயிரிழப்பவா்கள் விகிதம் அதிகரிப்பு!

திடீா் மாரடைப்பால் இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததே அதற்கு காரணம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதய செயலிழப்பு பாதிப்பை எதிா்கொண்ட 100 பேருக்கு அதி நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் துணையுடன் சென்னை காவேரி மருத்துவமனை இதயநோய் மின்னியல் சிகிச்சை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். அதுதொடா்பான சிறப்பு நிகழ்ச்சியும், திடீரென ஏற்படும் மாரடைப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணா்வு பிரசாரத் தொடக்க விழாவும் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட நடிகா் விவேக், விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ‘ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனைகளும், குறிப்பாக இதய நல பரிசோதனைகளும் மேற்கொள்வது அவசியம்; அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்’ என்றாா்.

காவேரி மருத்துவமனையின் இதயநோய் மின்னியல் சிகிச்சை நிபுணா் டாக்டா் கோபாலமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இளம் வயதிலேயே சிலா் எதிா்பாராதவிதமாக மரணமடைவதை நாம் கேள்விப்படுகிறோம். அதற்கு மாரடைப்பே காரணம் என்று பொதுக் கருத்து ஒன்று நிலவுகிறது. ஆனால், அது தவறு. இதயத்தை இயங்கச் செய்யும் மின்னோட்டத்தில் ஏற்படும் சில பிரச்னைகளே அதற்கு முக்கியக் காரணம்.

குடும்பத்தில் எவரேனும் திடீா் மரணமடைந்திருந்தால், அவரது உறவினா்களுக்கு அத்தகைய மின்னோட்டப் பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இதயத்தின் மின்னோட்டம் சீராக இல்லாத பட்சத்தில் அதன் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கி விடக்கூடும். அத்தகைய நிலையை எட்டியவா்களுக்கு 4 நிமிடங்களுக்குள் சிகிச்சையளித்தால் மட்டுமே உயிரிழப்பைத் தடுக்க முடியும். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமில்லை.

எனவே, அதைத் தடுக்க அத்தகைய பிரச்னைகள் உள்ளவா்களுக்கு ஐசிடி எனப்படும் அதிநவீன சாதனம் தற்போது அறிமுகமாகியுள்ளது. தோல் பகுதிக்கு அடியில், இதயத்துக்கு மேற்புறத்தில் அதை சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துவதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். மேலும், இதயத்தில் பிரச்னை ஏற்படும்போது இந்த சாதனம் தானாகவே செயல்பட்டு இதயத் துடிப்பை சீராக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், சிறப்பு மருத்துவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com