திருக்குறளுக்கு இணையான புகழ் பரிமேலழகருக்கும் உண்டு: நீதிபதி ஆர்.மகாதேவன்

திருக்குறளுக்கு இணையான பெருமை அதற்கு மிகச் சிறந்த உரை எழுதிய பரிமேலழகருக்கும் உண்டு என  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார். 
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'பாமரருக்கும் பரிமேலழகர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) கற்க கசடற அமைப்பு நிறுவனர் சு.செந்தில்குமார், சந்தியா பதிப்பகம் பதிப்பாளர் நடராஜன், பேராசிரியர்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'பாமரருக்கும் பரிமேலழகர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) கற்க கசடற அமைப்பு நிறுவனர் சு.செந்தில்குமார், சந்தியா பதிப்பகம் பதிப்பாளர் நடராஜன், பேராசிரியர்

திருக்குறளுக்கு இணையான பெருமை அதற்கு மிகச் சிறந்த உரை எழுதிய பரிமேலழகருக்கும் உண்டு என  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார். 
வள்ளுவர் குரல் குடும்பம்,  கற்க கசடற அறக்கட்டளை, சந்தியா பதிப்பகம் ஆகியவை சார்பில் "பாமரருக்கும் பரிமேலழகர்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில் நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியது: 
உலகம் போற்றும் திருக்குறளுக்கு பலர் உரை எழுதியிருந்தாலும் அதில் பரிமேலழகர் எழுதிய உரை தனித்து நிற்கிறது. திருக்குறளுக்கு பரிமேலழகர், தத்துவார்த்தமாக,  இலக்கணத்துக்கு உட்பட்டு இலக்கிய சாராம்சங்களைச் சார்ந்து தனக்கான உரையைப் பதிவு செய்ததன் மூலமாக அந்த உரை அறிஞர்களால் ஆகச்சிறந்த உரையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.  
அதன் மீது மாறுபட்ட கருத்துகள் திணிக்கப்பட்டாலும் அல்லது முன்வைக்கப்பட்டாலும் பரிமேலழகர் திருக்குறளை கையாண்ட விதமும், இலக்கணக் கூறுகளை ஆழ்ந்து நோக்கி ஒவ்வொரு குறளுக்கும் அவர் தந்த உரையும் வியக்க வைக்கின்றன.  
திருக்குறளை வளப்படுத்தும் உரைகள்: திருக்குறளுக்கு உள்ள பெருமை அந்த நூலுக்கு மிகச்சிறந்த உரை தந்த பரிமேலழகருக்கும் உண்டு. 
இத்தகைய பெருமை வாய்ந்த பரிமேலழகரின் உரைக்கு  தமிழ்ப் பண்டிதராக, தமிழறிஞராக இல்லாத சி.ராஜேந்திரன், "பாமரருக்கும் பரிமேலழகர்' என்ற நூல் மூலமாக சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில், தனது  உரையை வழங்கியிருக்கிறார். 
இது திருக்குறள் மீது அவர் கொண்டிருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது. திருக்குறளின் மேன்மையை, உரைகள் வளப்படுத்திக் காட்டும். 
வள்ளுவர் தமிழுக்கு மட்டுமல்ல; உலகிற்கே அளித்த பெரும் கொடை திருக்குறள். உலகில் உள்ள ஒவ்வொருவரும் திருக்குறளை கட்டாயமாகப் படித்து அதில் உள்ள உன்னதமான விஷயங்களை உள்ளத்தில் நிறுத்தி கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர். 
தனக்குவமை இல்லாமல்...: இதைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் பேசுகையில், "இதுவரை எழுதப்பட்ட உரை நூல்களில் தனக்குவமை இல்லாமல் தனித்தன்மை பெற்று விளங்குவது பரிமேலழகரின் உரை மட்டுமே. அவர்  மட்டும் திருக்குறளுக்கு உரை எழுதாமல் இருந்திருந்தால், திருவள்ளுவர் சில குறள்களை பிழையோடு எழுதியிருப்பாரோ என எண்ணியிருப்போம். 
அந்தளவுக்கு நேர்த்தியாக, திருக்குறளில் ஒவ்வொரு சொற்களும் ஏன், எதற்காக பயன்படுத்தப்பட்டன என்பதை பரிமேலழகர் விளக்கியிருப்பார்.  பரிமேலழகரின் உரை தோன்றி ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்குப் பிறகும், அது மெத்தப் படித்தவர்களுக்கே விளங்குவதாக உள்ளது. 
அதை பாமரருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது சி.ராஜேந்திரன் எழுதிய "பாமரருக்கும் பரிமேலழகர்' நூல் பரிமேலழகர் குறித்த முழுமையான புரிதலை நிச்சயம் ஏற்படுத்தும் என்றார். 
இதையடுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் சாமி தியாகராசன், சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் செயலாளர் "சிவாலயம்' ஜெ.மோகன் ஆகியோர் பரிமேலழகரின் உரை குறித்து விளக்கிப் பேசினர்.  
இந்த கருத்தரங்கில் நூலாசிரியரும், சுங்கம், கலால் மற்றும் சேவை வரி தென் மண்டல தீர்ப்பாயத்தின் துணைத் தலைவருமான சி.ராஜேந்திரன், சந்தியா பதிப்பக பதிப்பாளர் நடராஜன், முனைவர் தே.சங்கர சரவணன், பேராசிரியர்கள் ம.வெ.பசுபதி,  மருதூர் அரங்கராசன், கற்க கசடற அறக்கட்டளை நிர்வாகி சு.செந்தில்குமார், அம்பத்தூர் கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன், இந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com