அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கக் கூடாது?

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏன் முன்னுரிமை அளிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கக் கூடாது?

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏன் முன்னுரிமை அளிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

 சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சிய 207 இடங்களை அந்தந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களிடம் தமிழக அரசு ஒப்படைத்து விட்டது. எனவே, இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியான நபர்களைக் கொண்டு இடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டு எத்தனை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது, ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில், மருத்துவ இடங்களுக்கான மூன்று கட்ட கலந்தாய்வுக்குப் பின்னரும் காலியிடங்கள் இருந்தால், ஒரு இடத்துக்கு 10 மாணவர்கள் என்ற விகிதத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில்தான் இடங்கள் நிரப்பப்பட்டதா எனத் தெரியவில்லை என்று  கூறப்பட்டது. அப்போது, தமிழக அரசு தரப்பில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை முறையாக நிரப்புவது குறித்து நீதிமன்றம் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்த 207 மருத்துவ இடங்களும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி படிப்புகளுக்கு தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்பவர்கள் மருத்துவப் படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளை நாடுகின்றனர். எனவே, அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். 

மேலும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் மதிப்பெண் விவரங்களை அகில இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com