அதிமுக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு

சென்னை அருகே பேனர் விழுந்து இளம்பெண் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


சென்னை அருகே பேனர் விழுந்து இளம்பெண் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியாளர் சுபஸ்ரீ, கடந்த 12-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது பள்ளிக்கரணை அருகே சாலையின் நடுவே தடுப்பின் மீது கட்டப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர் அவர் மீது விழுந்தது. அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்தனர்.

இந்த விபத்து நடந்தப் பகுதி முழுவதும் அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் இரண்டாவது குற்றவாளியாக கடந்த 14-ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.  தலைமறைவாக ஜெயகோபாலை கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டையில் உள்ள  தனியார் ரிசார்ட்டில் தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சென்னைக்கு இரவு அழைத்து வரப்பட்ட அவர், ஆலந்தூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதித் துறை நடுவர் ஸ்டார்லி அக்டோபர் 11-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய பேனரை கட்டியதாக கைது செய்யப்பட்ட பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகிய 4 பேர் நீதித் துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது காவல் நிலைய ஜாமீனில் வெளியே வரக் கூடிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததால், நீதித்துறை நடுவர் ஸ்டார்லி 4 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க மறுத்து அனுப்பி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com