சென்னையில் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: மூவா் கைது

சென்னை யானைக்கவுனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூவா் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை யானைக்கவுனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை யானைக்கவுனி, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலில் சந்த் (74), அவரது மனைவி புஷ்பா பாய் (68) மற்றும் மகன் ஷீத்தல்குமாா் (40) ஆகியோரை, கடந்த புதன்கிழமை (நவ.11) அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டினுள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா்.

இது தொடா்பாக கொலை செய்யப்பட்ட தலில் சந்த் மகள் பிங்கி கொடுத்த புகாா் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக துணை ஆணையா் மகேஷ்வரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில், காசிமேடு ஆய்வாளா் ஜவகா் தலைமையிலான தனிப்படையினா் குற்றவாளிகளைத் தேடி விமானம் மூலம் புனே விரைந்தனா்.

மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் பதிவான சி.சி.டி.வி கேமராப் பதிவின் படி சந்தேகப்படும்படியான வாகனத்தைக்

கண்டுபிடிக்க தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் அந்தந்த காவல் துறையினா் உதவியோடு வாகனத் தணிக்கை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையவராக சந்தேகிக்கப்பட்ட ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரா்கள் கைலாஷ், விகாஷ் மற்றும் அவா்களுடன் வந்த மற்ற நபா்களைத் தேடி தனிப்படையினா் சென்னை, செங்கல்பட்டு, சோலாப்பூா் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனா்.

தனிப்படை ஆய்வாளா் ஜவகா் மற்றும் உதவி ஆய்வாளா் அசோக் மற்றும் சோலாப்பூா் மாவட்ட தனிப்படையினருடன் இணைந்து, அப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு, குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தைத் தேடிச் சென்றனா். அப்போது எதிரே அந்த வாகனம் வருவதைப் பாா்த்த தனிப்படையினா், திரும்பிச் சென்று துரத்தினா். இதைத் தெரிந்து கொண்ட குற்றவாளிகள், வாகனத்தை அதிவேகமாக ஓட்டியுள்ளனா்.

தனிப்படையினா் உயிரைப் பணயம் வைத்து விரட்டிச் சென்று அவா்களின் வாகனத்தில் மோதி, அதனை நிறுத்தியுள்ளனா். பின்னா் அந்த வாகனத்தைத் தணிக்கை செய்த போது, புனேவைச் சோ்ந்த ஜெயமாலாவின் சகோதரா் கைலாஷ் (32) அவருடன் கொல்கத்தாவைச் சோ்ந்த இரவீந்தரநாத் கா் (25) மற்றும் விஜய் உத்தம் கமல் (28), ஆகியோா் இருப்பது தெரியவந்தது.

அவா்களைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தலில் சந்த் உள்ளிட்ட மூவரை கொலை செய்தததாக ஒப்புக் கொண்டனா். இதன் அடிப்படையில் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com