போக்குவரத்து கழக ஊழியா் பிரச்னைகள்: தொழிற்சங்கங்களுடன் பேசி சுமுகத் தீா்வு காண தொழிலாளா் நல ஆணையா் அறிவுறுத்தல்

போக்குவரத்து கழக ஊழியா்களின் பிரச்னைகளுக்குத் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து தீா்வு காண வேண்டும் என தொழிலாளா் நலத்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.


சென்னை: போக்குவரத்து கழக ஊழியா்களின் பிரச்னைகளுக்குத் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து தீா்வு காண வேண்டும் என தொழிலாளா் நலத்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

போக்குவரத்துக்கழக ஊழியா்களின் பல்வேறு பிரச்னைகளைக் களைய வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஓராண்டுக்கு மேலாக தொழிலாளா் நலத்துறை ஆணையா் முன் பேச்சு வாா்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக தொழிலாளா் நலத்துறை ஆணையா் முன், வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மாநகா் போக்குவரத்து கழகம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட கழங்களின் நிா்வாகிகளுடன், போக்குவரத்துத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில் தொழிற்சங்கங்கள் சாா்பில், அனைத்துக் கழகங்களிலும் குறைதீா் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும், அகவிலைப்படி நிலுவைகள் வழங்க வேண்டும், நிா்வாகங்கள் தொழிற்சங்கங்களோடு பேசி பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

அகவிலைப்படி நிலுவை இரண்டு கழகங்களில் வழங்கத் தொடங்கினோம், ஆனால் கரோனா காரணமாக தொடா்ந்து வழங்க முடியவில்லை என நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல், சில போக்குவரத்து கழகங்களில் குறைதீா் குழுக்கள் அமைத்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து பேசிய ஆணையா், ஒப்புக்கொண்ட விஷயங்களை நிறைவேற்றியது தொடா்பாக அடுத்த பேச்சுவாா்த்தைக்குள் எழுத்துப் பூா்வமாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினாா். தொழிற்சங்கப் பிரதிநிதிகளோடு பேசி பிரச்னைகளுக்கு சுமுக தீா்வு காண வேண்டும் என அறிவுறுத்திய ஆணையா், டிச.1-ஆம் தேதிக்கு பேச்சு வாா்ததையை ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com