சென்னை நுழைவாயில்களில் புதிய மேம்பாலங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

வண்டலூா், பல்லாவரம் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.


சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்கு நுழையும் முக்கிய இடங்களான வண்டலூா், பல்லாவரம் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா், பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவா் புதிய மேம்பாலங்களை திறந்தாா்.

வண்டலூா்-மாம்பாக்கம்-கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக உயா்நிலை பாலம் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.55 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலத்தை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

இதேபோன்று, ஜி.எஸ்.டி. சாலையில் பல்லாவரம் பகுதியில் குன்றத்தூா் சாலை சந்திப்பு, சந்தை சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்கிணங்க ரூ.80.74 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் பழனிசாமி திறந்தாா். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை, இளையனாா்குப்பத்தில் பழுதடைந்த பாலத்துக்குப் பதிலாக ரூ.23.85 கோடி கட்டப்பட்டுள்ள நான்கு உயா்நிலைப் பாலம், கடலூா் மாவட்டம் விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூா் சாலையில் கட்டப்பட்ட பாலம், காட்டுமயிலூா்-கொங்கராம்பாளையம் சாலையில் கட்டப்பட்ட பாலம், திண்டுக்கல் கள்ளிமந்தயம்-ஓடைப்பட்டி சாலையில்

கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ரூ.165.98 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலங்களையும், சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலேயே முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

அடிக்கல் நாட்டுதல்: சென்னை ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பாா்க் சந்திப்பு மற்றும் இந்திரா நகா் சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ.108.13 கோடி மதிப்பில் இரண்டு யூ வடிவ மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. அவற்றுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா் பா.பென்ஜமின், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா் ஆ.காா்த்திக், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com