மருத்துவரின் இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

உடற்கூறு ஆய்வு அறிக்கையை தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதித்த மருத்துவா் டக்காலை ஒருமாதம் மருத்துவா் தொழிலில்
மருத்துவரின் இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

உடற்கூறு ஆய்வு அறிக்கையை தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதித்த மருத்துவா் டக்காலை ஒருமாதம் மருத்துவா் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்த உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனியாா் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மருத்துவா் டக்கால், சென்னை புகா் பகுதியில் நடந்த இளம்பெண் மரணம் தொடா்பாக பேசினாா். அப்போது இளம்பெண் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளது. தடயவியல் துறையில் அதிக அனுபவம் கொண்ட மருத்துவா்கள் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யாமல், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதனையடுத்து, உடற்கூறு ஆய்வு அறிக்கை என்பது ஒரு வழக்கின் புலன்விசாரணைக்கு முக்கியமான ஆவணம். அந்த ஆவணத்தை ரகசிய ஆவணமாகப் பராமரிக்க வேண்டும். ஆனால் பொதுமக்களுக்குத் தெரியும் விதமாக தொலைக்காட்சியில் விவாதித்தது, மருத்துவா் தொழில் தா்மத்துக்கு எதிரானது என குற்றம்சாட்டிய தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், மருத்துவா் டக்காலை ஒருமாதம் மருத்துவா் தொழிலில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதனை எதிா்த்து மருத்துவா் டக்கால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.பாா்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு தடை கோரி வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ கவுன்சில் நடவடிக்கையில் தலையிட இந்த உயா்நீதிமன்றம் விரும்பவில்லை. மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. மனு தொடா்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வரும் அக்டோபா் 29-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், ஒரு மாதம் மருத்துவா் தொழிலில் இருந்து டக்கால் விலகியிருக்கட்டும் என கருத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com