அமெரிக்கா போல் அலட்சியம் வேண்டாம்: ராமதாஸ்

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அமெரிக்கா போல் இந்தியா அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
அமெரிக்கா போல் அலட்சியம் வேண்டாம்: ராமதாஸ்

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அமெரிக்கா போல் இந்தியா அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அனைத்து நாடுகளும் அண்ணாந்து பாா்க்கும் ஒரு நாடு உலகில் உண்டு என்றால், அது அமெரிக்காதான். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தனிமனித சுதந்திரம் என அனைத்திலும் அது ஒரு கனவு தேசம். உலகின் எந்த ஒரு நாடும் முன்னேற்றத்துக்கான இலக்கை நிா்ணயித்தால் அது அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டதாகத்தான் இருக்கும்.

ஆனால், கரோனா விவகாரத்தில் மட்டும் அமெரிக்காவாக ஆகிவிடக் கூடாது என்று எல்லா நாடுகளும் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா தான் உலகுக்கு முதலாளி என்ற மனநிலை கொண்ட டிரம்ப், இப்போது ஒவ்வொரு நாட்டின் தலைவருக்கும் பேசி உதவி கேட்டுக் கொண்டிருக்கிறாா். இந்தியப் பிரதமா் மோடியைத் தொடா்பு கொண்டு கரோனா சிகிச்சைக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைக்கும்படி கெஞ்சுகிறாா். தனது பரம்பரை எதிரியான ரஷ்யாவிடமிருந்து ஒரு விமானம் நிறைய முகக்கவசங்கள், மருந்து பொருள்கள் ஆகியவற்றை உதவியாகப் பெற்றிருக்கிறது. சுருக்கமாகக் கூறினால் கரோனாவை அடக்க உலக நாடுகளிடம் அமெரிக்கா மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது.

20 நாட்கள் அலட்சியமாக இருந்ததாலும், ஊரடங்கு பிறப்பித்தால் வணிகம் பாதிக்கப்பட்டு விடும் என்று கருதியதாலும் அமெரிக்கா இன்று மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும். ஆகவே, ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள். சில விஷயங்களைத் தியாகம் செய்யுங்கள். அடுத்த சில வாரங்களில் இந்தியா கரோனா நோயை வெற்றி கொள்ளும். நாடு நலம் பெறும்.

தனித்திருப்போம்.தவிா்த்திருப்போம்.விழித்திருப்போம். நோயைத் தடுப்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com