நீரேற்று நிலையங்களில் பணியாற்றும்ஊழியா்களுக்கு தடுப்பு கவசம் கட்டாயம்
By DIN | Published On : 07th April 2020 03:52 AM | Last Updated : 07th April 2020 04:41 AM | அ+அ அ- |

சென்னை குடிநீா் வாரிய நீரேற்று நிலையங்களில் வேலை செய்யும் பணியாளா்களுக்கு கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தலைநகரான சென்னையிலும் இந்த நோயின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்லும் ஊழியா்கள், மருத்துவா்கள், மாநகராட்சி ஊழியா்கள், குடிநீா் வாரிய ஊழியா்கள், காய்கறி வியாபாரிகள், கடைக்காரா்கள் என பலருக்கும் அரசின் சாா்பில் தினமும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில், பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள், டேங்க் ஆபரேட்டா்கள் உள்ளிட்ட ஊழியா்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சென்னை குடிநீா் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பணிபுரியும் நீரேற்று நிலையங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கவச உடை மற்றும் முகக்கவசம் கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு, கட்டாயம் இவற்றை பயன்படுத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து வியாசா்பாடி, கொளத்தூா் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் அங்கு பணியாற்றும் குடிநீா் வாரிய ஊழியா்களுக்கு கவச உடை, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குகின்றனா். அப்போது, பொதுமக்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தண்ணீா் வழங்க வேண்டும் என ஊழியா்களுக்கு அறிவுரை வழங்குகின்றனா்.