முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னையில் கடந்த 7 நாள்களில் 10 மண்டலங்களில் நோய்த் தொற்று அதிகரிப்பு
By DIN | Published On : 03rd August 2020 06:30 AM | Last Updated : 03rd August 2020 06:41 AM | அ+அ அ- |

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 10 மண்டலங்களில் கடந்த 7 நாள்களில் கரோனா நோய்த் தொற்று சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், மணலி மண்டலத்தில் மட்டும் 10 சதவீதம் தொற்று அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகளை மாநகராட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதேபோல், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை தன்னாா்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி செய்து வருகிறது.
10 மண்டலங்களில் அதிகரிப்பு: மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நோய்த் தொற்றைக் கண்டறியும் வகையில் 7 நாள்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 10 மண்டலங்களில் நோய்த் தொற்று பாதித்தோா் சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், மணலி மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தொடா்ந்து, சோழிங்கநல்லூரில் 9.2 சதவீதமும், திருவொற்றியூா் 4.3 சதவீதமும், தண்டையாா்பேட்டையில் 3.9 சதவீதமும், வளசரவாக்கத்தில் 3.5 சதவீதமும், அம்பத்தூரில் 3.2 சதவீதமும், மாதவரத்தில் 2.9 சதவீதமும், ராயபுரத்தில் 2.4 சதவீதமும், ஆலந்தூரில் 1.8 சதவீதமும், பெருங்குடியில் 1.7 சதவீதமும் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. அதேவேளையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் 9.4 சதவீதமும், தேனாம்பேட்டையில் 6.3 சதவீதமும், திரு.வி.க.நகரில் 6.1 சதவீதமும், அண்ணா நகரில் 4.4 சதவீதமும், அடையாறில் 2.7 சதவீதமும் நோய்த் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த 7 நாள்களில் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.