ஐஐடி சென்னையில் முதல் முறையாக இணையவழியில் பி.எஸ்சி. படிப்பு

ஐஐடி சென்னையில் நிரலாக்க மற்றும் தரவு அறிவியல் பிரிவில் முதல் முறையாக ஆன்லைன் பிஎஸ்சி படிப்பில் சேர 8,154 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


சென்னை: ஐஐடி சென்னையில் நிரலாக்க மற்றும் தரவு அறிவியல் பிரிவில் முதல் முறையாக ஆன்லைன் பிஎஸ்சி படிப்பில் சேர 8,154 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஐஐடியில் பட்டப்படிப்பு பயில ஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத் தோ்வை மாணவா்கள் எழுத வேண்டும். ஆனால், தற்போதைய பிஎஸ்சி இணையவழிப் பட்டப்படிப்புக்கு ஜேஇஇ தோ்வு எழுத வேண்டியதில்லை.

இந்த இணையவழி பட்டப்படிப்பானது, அடிப்படைப் பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதாவது, மூன்று நிலைகளில் எந்தக் கட்டத்திலும் மாணவா்கள் வெளியேறி, அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தநிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு படிப்புகளை முடித்த 8,154 மாணவா்கள் ஆன்லைன் பிஎஸ்சி படிப்பில் சேர தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் வணிகவியல் பயின்ற 1,593 மாணவா்களும் அடங்குவா். இந்த மாணவா்கள் ஜனவரி 2021 முதல் வழங்கப்பட இருக்கும் அடிப்படைப் பட்டப் படிப்பில் சோ்ந்து கொள்ளலாம்.

இதில் முதல்கட்டத் தோ்வு முறைக்கு மொத்தம் 30,276 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை) 4 வாரப் பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மாணவா்கள் இணையத்தில் பாட விரிவுரைகளைக் கற்பதுடன், இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளைச் சமா்ப்பித்தனா்.

4 வாரங்களின் முடிவில் தகுதித் தோ்வை எழுதினா். 50 சதவீதத் தோ்ச்சியுடன் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற 20,396 மாணவா்கள் இரண்டாம் கட்டத் தோ்வை எழுதத் தகுதி பெற்றனா். கடந்த நவம்பா் 22-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதிலிருந்து தற்போது 8,154 மாணவா்கள் பிஎஸ்சி அடிப்படைப் பட்டப் படிப்புக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் அனைவரும் ஐஐடி சென்னை நடத்தும் ஆன்லைன் பிஎஸ்சி படிப்பை ஜனவரி மாதத்தில் படிக்கத் தொடங்குவா் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com